Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM
சென்னையில் கடந்த மாதம் சில இளைஞர்கள் வாலை வெட்டியதால் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நாயை பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகியின் மகள் யக்ஞ பிரபா (64) தத்தெடுத்து, தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
சென்னை அய்யப்பன் தாங்கல் கஜலட்சுமி நகர் சிவன் கோயில் தெவை சேர்ந்த சோமு (29), அசோக் (23), ஹரி (19), பேச்சிமுத்து (26) ஆகிய நான்கு பேர், அப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தனர். அவர்கள் தெருவில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை ஆசையாய் தூக்கிவந்து வளர்த்து வந்தனர். ஏதோ காரணத்தினால் நாய் உடல் மெலிந்து, சுறுசுறுப்பு இல்லாமல், நோஞ்சானாகவே இருந்தது.
வாலை வெட்டினால் நாய் சுறுசுறுப்பாக இருக்கும் என்று ‘புத்திசாலி’ ஒருவர் கூற கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர்கள் அரிவாளால் நாயின் வாலை ஒட்ட வெட்டினர். வலி தாங்க முடியாத நாய் வெட்டப்பட்ட வால் தொங்கிய நிலையில் அந்தப் பகுதி முழுவதும் வேதனை முனகலுடன் சுற்றி வந்து கொண்டிருந்தது.
அக்கம்பக்கத்தினர், புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த புளூ கிராஸ் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 இளைஞர்களையும் கைது செய்தனர். அதன்பின், அந்த நாய்க்கு சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தொங்கிய படி இருந்த வால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன்பின், வேளச்சேரியில் உள்ள புளூகிராஸ் அலுவலகத்துக்கு நாயை தூக்கிச்சென்று பாதுகாப்பாக வளர்த்து வந்தனர்.
இது பற்றிய செய்தியை அறிந்த பழம் பெரும் நடிகை சவுகார்ஜானகியின் மகள் யக்ஞ பிரபா, அந்த நாயை தனது பராமரிப்பில் வைத்து நல்லபடியாக வளர்க்க திட்டமிட்டார். அதனை உரிய முறையில் தத்தெடுத்துள்ளார்.
இதுதொடர்பாக யக்ஞ பிரபா கூறியதாவது:
நாய் வாலை வெட்டிவிட்டனர் என்ற செய்தியை பத்திரிகையில் படித்ததும் நான் மிகவும் வேதனை அடைந்தேன். அதன்பின், அந்த நாயை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். நாய்க்கு மேரி பிரவுன் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அது ஆண் நாய் என்பதால், மேரி பிரவுன் என்பதற்கு பதிலாக மெர்ரி பிரவுன் என பெயர் வைத்துள்ளேன். மெர்ரி என்னுடைய பெட்ரூமில்தான் விளையாடிக் கொண்டிருக்கிறான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான். இரவு நேரத்தில் வெளியே பனி அதிகமாக இருப்பதால், மெர்ரியை நான் பெட்ரூமிலேயே படுக்கவைக்கிறேன். மெர்ரியை எனது வீட்டுக்கு கொண்டு வரும்போது 6.6 கிலோ இருந்தான். ஆனால், தற்போது 9 கிலோ உள்ளான். வீட்டுக்கு யார் வந்தாலும் கேட்டின் முன்பு சென்று குரைக்கிறான். கோவளத்தில் சத்யா சாயி பிராணி சேவா ஷெல்டர் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். அங்கு சுமார் 50 நாய்கள் உள்ளன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாத்துள்ளேன். தினமும் தெருவில் உள்ள 300 நாய்களுக்கு உணவு கொடுக்கிறேன் என்றார்.
இது தொடர்பாக புளூ கிராஸ் இந்தியா பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் கூறிய தாவது:
நாய் வாலை ஒட்ட வெட்டியதால், முதுகுத் தண்டுவடத்தின் கீழ் எலும்புகள் சேதமடைந்து விட்டன. சென்னையை சேர்ந்த டாக்டர் லட்சுமி என்பவர் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டார். சிகிச்சைக்கு பிறகு நாய் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக உள்ளது.
வாலை வெட்டியவர்கள் வேலை செய்துவந்த கடையின் பெயரான மேரி பிரவுன் என்பதையே நாய்க்கு பெயராக வைத்துள்ளனர். இந்த நாய் தொடர்பாக தன்னார்வலர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்தோம். இதையடுத்து, யக்ஞ பிரபா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அலுவலகத்துக்கு வந்தார். மேரி பிரவுன் நாயை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் நாயை ஒப்படைத்தோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT