Last Updated : 01 Feb, 2014 08:50 PM

 

Published : 01 Feb 2014 08:50 PM
Last Updated : 01 Feb 2014 08:50 PM

மகளிர் வழக்குகளில் தாமதமாகும் நீதி! பூரணமாகாத தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம்

தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் அமைந்து 4 மாதங்கள் ஆன போதும், இன்னும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. இதனால், மாணவி புனிதா கொலை வழக்கு உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாமதமாகி வருகின்றன.

புனிதா கொலை

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கிளாக்குளத்தை சேர்ந்த சௌந்திரராஜன் மகள் புனிதா(13). நாசரேத் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 2012 டிச.20-ம் தேதி, பள்ளி முடிந்து தாதன்குளம் ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

டெல்லி மாணவி பலாத்காரம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

இது தொடர்பாக, செய்துங்கநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகேயுள்ள பாறைகுட்டத்தை சேர்ந்த சி.சுப்பையா (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, முதலில் திருவைகுண்டம் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்றது. போலீஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக, சுமார் 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மகளிர் நீதிமன்றம்

இந்நிலையில், தூத்துக்குடியில் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்.19-ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து, மாணவி புனிதா கொலை வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு, செப்.20-ம் தேதியே மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 23.9.2013-ல், முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, 6.11.2013-ல் விசாரணை தொடங்கும் என கூறி, வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

அரசு வழக்கறிஞர் இல்லை

ஆனால், அரசு வழக்கறிஞர் இல்லாததால், வழக்கு விசாரணையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 6-ம் தேதி முதல் தற்போது வரை 5 முறை இந்த வழக்கு வாய்தா போடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி ஆர். கமலாவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் எதிரியான சுப்பையா, நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் வழக்கு விசாரணையை மீண்டும், பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தாமதமாகும் நீதி

மகளிர் நீதிமன்றம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், இதுவரை அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. இதனால், மகளிர் நீதிமன்றத்தில் 85-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை நடத்தப்படாமல் தொடர்ந்து வாய்தா போடப்பட்டு வருவதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் 2012-ன் கீழ் தொடரப்பட்ட 4 வழக்குகளும் அடங்கும். இதில் மாணவி புனிதா வழக்கு முக்கியமானதாகும்.

இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமை அமைப்பின் தலைவர் ஆ. சங்கர் கூறுகையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்- 2012 பிரிவு 35 (1)-ன் படி 30 நாட்களுக்குள் சாட்சிகள் பதிவு செய்ய வேண்டும். பிரிவு 35 (2)-ன் படி ஓராண்டுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாணவி புனிதா வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். எனவே, உடனடியாக அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

89 வழக்குகள் பாதிப்பு

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க செயலாளர் பெ. கணபதி சுப்பிரமணியன் கூறுகையில், மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றம் அமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை.

இதனால், மகளிர் நீதிமன்றத்தில் மட்டும் 89 வழக்குகள் எவ்வித விசாரணையும் இன்றி தொடர்ந்து வாய்தா போடப்பட்டு வருகிறது. இவை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்கு கள். எனவே, இந்த நீதிமன்றத்துக்கு உடனடியாக அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x