Last Updated : 07 Oct, 2013 12:00 AM

 

Published : 07 Oct 2013 12:00 AM
Last Updated : 07 Oct 2013 12:00 AM

விஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும்!

வீதியில் விரும்புபவர்கள் எடுத்துச் செல்லவும் தேவைப்பட்டால் விட்டுச் செல்லவும் சைக்கிள் நிறுத்தங்களை பிரான்ஸ் அமைக்கலாம்; மெக்கினாக் தீவில் சைக்கிளில் செல்வதற்கென்றே 'எம்.185' வீதியை அமெரிக்கா ஒதுக்கலாம்; நாம் இருப்பது இந்தியாவில் அல்லவா? கொல்கத்தா நகரின் 174 வீதிகளில் சைக்கிள்களை ஓட்டவே கூடாது என்று தடை விதித்திருக்கிறது மம்தாவின் காவல் துறை. இவற்றில் 38 வீதிகள் பெரியவை.

முட்டுச்சந்துகளும் சந்துபொந்துகளும் நிரம்பிய கொல்கத்தாவில், இந்த வீதிகளைத் தொடாமல், நகரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியாது. ஆக, மறைமுகமாக ஒட்டுமொத்த சைக்கிளோட்டிகளின் காற்றையும் பிடுங்கிவிட்டிருக்கிறார் மம்தா. இதற்கு ஆளுங்கட்சி சொல்லும் நியாயம் இது: "கொல்கத்தாவில் வாகனங்களின் சராசரி வேகம் 14 - 18 கி.மீ. நாட்டின் சராசரி வேகம் 22 கி.மீ. இதற்கு முக்கியக் காரணம் மோட்டார் பொருத்தப்படாத சைக்கிள்கள், தள்ளுவண்டிகள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள், கை ரிக்‌ஷாக்கள், பார வண்டிகள்தான். ஆகையால், அவற்றை விலக்கிவைக்கவே இந்த நடவடிக்கை."

அசருவார்களா போலீஸார்? அவர்களுடைய நியாயம் இது: "சைக்கிள்கள் மெதுவாகச் செல்வதால், ஏனைய வாகனப் போக்குவரத்தின் வேகமும் மந்தமாகிறது, சைக்கிளோட்டிகள் திடீர் திடீரென தங்களுடைய சைக்கிள்களைத் திருப்புவதால் மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்க நேர்கிறது. தவிர, இப்போதெல்லாம் பயங்கரவாதிகள் சைக்கிள்களில்தான் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்."

ஆளுங்கட்சி மற்றும் போலீஸாரின் இந்த 'அரிய கண்டுபிடிப்பு'களும் 'நுண்ணுர்வு மிக்க தொலைநோக்குப் பார்வை'யும் பிடிபடாதாலோ பழைய ஞாபகத்திலோ சைக்கிள் விடும் ஏழைபாழைகளை கொல்கத்தா போலீஸார் கோழி பிடிப்பதுபோல பிடித்துவிடுகின்றனர். உடனடி அபராதம் ரூ. 100 அல்லது சைக்கிளே பறிமுதல்.

கொல்கத்தாவாசிகள் கடந்த வாரம் இந்தத் தடையைக் கண்டித்து 'சக்கர சத்தியாகிரகம்' போராட்டம் நடத்தினர். பால்காரர்கள், தபால்காரர்கள், செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், குடை பழுது பார்ப்பவர்கள், மீன் வியாபாரிகள், பூக்காரர்கள், சின்ன நிறுவனங்கள் - கடைகளில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மம்தாவை நோக்கிக் குரல் எழுப்பினார்கள். முழக்கம் போட்டார்கள், கத்திப் பார்த்தார்கள், முனகித் தீர்த்தார்கள்...

மம்தாவுக்கு இப்போது இவர்கள் சத்தம் எல்லாம் காதில் கேட்குமா? அவர் 'புதிய கண்டுபிடிப்பு'களில் மும்முரமாக இருக்கிறாரே? கட்டிய தொண்டையுடன் அடைத்த குரலுடன் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு, வீடு திரும்பிய ஏழைபாழைகள் காத்திருக்கிறார்கள். தேர்தல் வரும் அல்லவா?

தொடர்புக்கு: writersamas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x