Published : 12 Oct 2014 11:35 AM
Last Updated : 12 Oct 2014 11:35 AM
கடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக் காரில் வாடகை வாங்காமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு ஏற்றிச்சென்று உதவியுள்ளார். நூற்றுக்கணக்கான பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்து உள்ளிட்ட அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களில் நிறைய பேர் பிழைத்துள்ளனர் என்ற இந்த வியக்க வைக்கும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன்.
ஏழை மக்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட ‘515’ கணேசன் என்று அழைக்கப்படும் 62 வயதான எஸ்.கணேசன், தனது சேவை குறித்து, ‘தி இந்து’விடம் கூறியது:
குடும்பச் சூழ்நிலையால் 8-ம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடியாமல் அப்போதிலிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அப்போ ஆலங்குடியில வசதியில்லாத ஒரு குடும்பத்தினர் இறந்துபோன உறவினரின் சடலத்தை காரில் எடுத்துச் செல்ல வழியில்லாம தள்ளுவண்டியில வச்சு அவங்களே வீட்டுக்கு தள்ளிக்கொண்டு போனதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு.
ஊரில் 2 வாடகைக் கார் இருந்தும் அவங்க காரில் பிணத்தையெல்லாம் ஏத்துறதில்லை. இந்த சம்பவத்துக்கு அப்புறம் இரும்பு வியாபாரம் செய்து சேர்த்து வச்சிருந்த ரூ.17 ஆயிரத்தைக் கொண்டு 44 வருஷத்துக்கு முன்னாடி 515 என்ற பதிவு எண்ணுள்ள காரை வாங்கினேன்.
அவசர தேவைக்காக தவிக்கிறவங்களுக்கு மட்டும் அந்தக் காரை வாடகை வாங்காமல் ஓட்டவேண்டும் என்பதே என் லட்சியம். பெரும்பாலும் பிரசவம், விபத்து, அனாதைப் பிணங்களை ஏற்றிச்செல்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எத்தனையோ அனாதைப் பிணங்களை நானே குழிவெட்டி அடக்கம் செய்திருக்கேன். நானாகாசு கேட்க மாட்டேன். ஒருசிலர் டீசல் போடுறதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.
ஒருமுறை சென்னையில இருந்து ஒரு பிணத்தை ஏத்திக்கிட்டு வர போயிருந்தேன். ஆலங்குடியில இருந்து நான் டீசல் போட்டுக்கிட்டு வந்துட்டேன். நீங்க டீசல் மட்டும் போடுங்க. ஊருக்கு போயிருவோம் என்றேன். என்னை அங்கே வரச்சொன்ன பெண்ணிடம் கையில காசு இல்லை. டக்குனு தாலியைக் கழற்றிக் கொடுத்து இதை அடகு வச்சு டீசல் போட்டுக்கிட்டு வாங்கன்னாங்க. இதுக்காடா நம்ம கார் வாங்குனோம்னு மனசு கொதிச்சுப் போச்சு. வேண்டாம்மான்னு சொல்லிட்டு அங்கேயே கொஞ்சம் கடன் வாங்கி டீசல் போட்டுக்கிட்டு பிணத்தை ஊருக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.
புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்ல யும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேர் பிழைச்சிருப் பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன்.
இப்ப வச்சுருக்குறது 17-வது காரு. இதை 2 வருஷத்துக்கு முன்னாடி ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கினேன். பிணம் ஏத்துறதுக்குன்னே சகல வசதியோட இப்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தாலும், என்னுடைய காரும் ஓடிக்கிட்டேதான் இருக்குது. இப்போது அவ்வளவாக பிரசவ உதவி கேட்டு யாரும் வருவதில்லை.
எனக்குன்னு ஒரு குழி நிலம்கூட கிடையாது. இன்றைக்கும் பழைய இரும்பு வியாபாரம்தான் செய்கிறேன். அதை வச்சுத்தான் காரை பராமரிக்கிறேன். 5 மகள்களில் 4 பேருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன். ஏழை சனங்களுக்கு இறுதிக்கட்டத துல உதவி செய்யுறது மனசுக்கு ரொம்பவும் திருப்திகரமா இருக்கு. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT