Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு பிறகு முதல் முறையாக குழந்தையுடன் ஆம்புலன்சில் வீட்டிற்கு செல்ல தாய்மார்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பதிலாக, குழந்தை மற்றும் தாய் அமர்ந்து செல்லும் வகையில் வேன் வடிவிலான வாகனங்களாக அவை மாற்றப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு பிறகு குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விடும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதல்கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமல்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மற்றும் திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் பிரசவத்திற்கு பின் குழந்தையுடன் முதல் முறையாக ஆம்புலன்ஸில் வீட்டிற்கு செல்ல தாய்மார்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், தாய்மார்கள் ஆட்டோக்கள் மற்றும் பஸ்களில் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் போதுமான அளவு வரவேற்பு கிடைக்காததால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேன்களாக மாற்றப்படுகின்றன.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:
பிரசவத்திற்கு பின் குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக வீட்டில் சென்று விடுவதற்கு தமிழகம் முழுவதும் 600 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைகளுக்கும் தலா 3 வீதம் 9 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரசவத்திற்கு பிறகு குழந்தையுடன் முதல் முறையாக ஆம்புலன்சில் வீட்டிற்கு செல்ல தாய்மார்களிடம் தயக்கம் உள்ளது.
அதனால், சென்னையில் குழந்தையும், தாயும் அமர்ந்து செல்லும் வகையில் வேன் வடிவிலான வாகனம் பயன்படுத்தப்படுகிறது. திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் மருத்துவமனையில் வேன் வடிவிலான வாகனம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தின் முன் பகுதியில் இலவச தாய்-சேய் பாதுகாப்பு வாகனம் என்று எழுதப்பட்டு இருக்கும்.
இதே போல தமிழகம் முழுவதும் பிரசவத்திற்கு பிறகு குழந்தையையும் தாயையும் பாதுகாப்பாக அழைத்து சென்று வீட்டில் விடுவதற்கு ஆம்புலன்ஸுக்கு பதில், வேன் வடிவிலான வாகனங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக ஆம்புலன்ஸ்கள் படிப்படியாக வேன்களாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT