Published : 22 Nov 2013 01:42 PM
Last Updated : 22 Nov 2013 01:42 PM

தூத்துக்குடி: 100 புரவலர்களை இணைத்த மாற்றுத்திறனாளி நூலகர்

“நூலகங்கள்தான் நாட்டின் அழியா சொத்துக்கள்” என்கிறார், தமிழக அரசின் நல் நூலகர் விருது பெற்ற காயல்பட்டணத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நூலகர் அ.முஜிபு.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறை சார்பில், நூலகத்துறையில் சிறப்பாக செல்படும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நல் நூலகர் விருது வழங்கப்படுகிறது.

நல் நூலகர் விருது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஒரு நூலகருக்கு, நல் நூலகர் விருதுகளை, கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதை, காயல்பட்டணம் கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர் மாற்றுத்திறனாளி அ.முஜிபு பெற்றுள்ளார். மாவட்ட நூலகத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நூலக வார விழாவில், முஜிபுக்கு, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார்.

காயல்பட்டணம் கிளை நூலகத்தில் 100 புரவலர்களை சேர்த்தது,; இவரது சாதனை. இவரது முயற்சியால் கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் செலவில் நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கிராம மக்கள் பங்களிப்பான ரூ. 7 லட்சத்தை பலரிடம் நன்கொடையாக வசூல் செய்து கொடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளியின் சாதனை:

நூலகத்தை தமது சொத்தாக நினைத்து பாதுகாத்து, மேம்படுத்தி வரும் முஜிபு, தமிழக அரசின் விருது குறித்து பெருமையாக கூறுகிறார். 2005-ம் ஆண்டு நூலகத்துறையில் வேலைக்கு சேர்ந்தேன். முதன் முதலில் ஊர்ப்புற நூலகராக, பழம் பெருமை மிக்க கொற்கை கிராமத்தில் பணியில் சேர்ந்தேன். 2010-ம் ஆண்டு முதல் காயல்பட்டணம் கிளை நூலகத்தில் பணியாற்றி வருகிறேன். தற்போது, மூன்றாம் நிலை நுலகராக இருக்கிறேன்.

காயல்பட்டணம் கிளை நூலகத்தில் 150 புரவலர்கள் உள்ளனர். இதில், 100 பேரை கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் சேர்த்தேன்.

நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை, 26 ஆயிரமாக உயர்த்தியுள்ளேன். மேலும், நூலக உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,100 ஆக உயர்ந்துள்ளது.

கிராம தன்னிறைவு திட்டத்தின் மூலம் ரூ. 14 லட்சத்தில் நூலக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சி தலைவி உள்ளிட்டோர் நன்கொடை அளித்து உதவினர்.

அழியா சொத்து:

நூலகப் பணி எனக்கு மிகுந்த மன நிறைவை, மகிழ்ச்சியை தருகிறது. இதனால் தான் முழு ஈடுபாட்டோடு இந்த பணியை செய்ய முடிகிறது. நூலகங்கள் தான் ஒரு நாட்டின் அழியாச் சொத்து. ஒரு ஊரில் உள்ள நூலகத்தின் வளர்ச்சியைக் கொண்டு, அந்த ஊரின் அறிவு வளர்ச்சியை தீர்மானித்துவிடலாம். நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை நூலகங்கள்தான் பாதுகாக்கின்றன.

காயல்பட்டணம் நகரில் உள்ள (35 ஆயிரம் பேர்) அனைத்து மக்களையும் நூலக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். காயல்பட்டணம் மட்டுமின்றி, எங்கே பணியாற்றினாலும் அதிக மக்களை நூலகப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் எனது ஆசை.

இணையதளம், சமூக வலைதளங்கள் எத்தனை வந்தாலும் நூலகத்துக்கான மதிப்பு குறையவில்லை. அனைத்து நூலகங்களுக்கும் கணினி உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும்.

குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாததால் ஊழியர்கள் மட்டுமின்றி வாசகர்களும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வரவில்லை. புதிய புத்தகங்களையும் அரசு வழங்க வேண்டும்.

நூலகங்களுக்கு வருவோர் போட்டித் தேர்வுகள் தொடர்பான புத்தகங்களை இளைஞரிகள் அதிகம் கேட்கிறார்கள். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வு தொடர்பான புத்தகங்களை, நூலகங்களுக்கு அதிகம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x