Published : 04 Feb 2014 07:35 PM
Last Updated : 04 Feb 2014 07:35 PM
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி நமக்குத்தான் என நம்பிக் கொண்டிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், ’இந்த முறை நாங்களேதான் போட்டியிடுவோம்’ என அதிமுக-வினர் உறுதியாகக் கூறுவதால் கம்யூனிஸ்ட்களின் நிலை இலவு காத்த கிளி கதையாகிவிடும் போலிருக்கிறது.
இம்முறை கம்யூனிஸ்ட்களுக்கு இத்தொகுதி இல்லை என அதிமுக-வினர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய நாகை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர்,
"அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு தோற்றுப் போனது கம்யூனிஸ்ட். அதனால் கடந்த தேர்தலில் கம்யூனிஸ்டுக்கு பதிலாக அதிமுகவைச் சேர்ந்த அர்ச்சுனனை நாகையில் நிறுத்தினோம். அவரும் திமுக வேட்பாளர் விஜயனிடம் தோல்வியடைந்தார். சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது. அதிமுக அணி தொடர்ந்து தோல்விகளை தழுவியதால் ‘நாகை திமுக கோட்டை’ன்னு திமுக.வினர் கூறுகின்றனர்.
அதைத் தகர்ப்பதற்காகதான் நாகை மாவட்டத்துக்கு அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் மட்டும் 26 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் பிரச்சினைக்கு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளால் மீனவ மக்களும் இந்தமுறை அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். இத்தனை சாதகமான அம்சங்கள் இருக்கும்போது நாங்கள் ஏன் கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதியை விட்டுத் தரவேண்டும்?’’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அப்படியானால் கம்யூனிஸ்ட்கள் எங்கு போவார்கள்? என்று அவர்களை கேட்டதற்கு, "ஏற்கெனவே இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னையும், தென்காசியும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரையும் கோயம்புத்தூரும் தயாரா இருக்கு’’ என்கிறார்கள்.
இதனிடையே, நாகையில் அதிமுக போட்டியை உறுதி செய்வதுபோல, தொகுதியில் உள்ள 1030 பூத்களுக்கும் பூத்கமிட்டி அமைக்கப்பட்டு தலா 5000 வீதம் பணப் பட்டுவாடாவும் செய்து தேர்தல் தேரை வடம்பிடித்து இழுக்க ஆரம்பித்துவிட்டது அதிமுக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT