Published : 26 Sep 2016 10:09 AM
Last Updated : 26 Sep 2016 10:09 AM
‘சென்னைக்கு மிக அருகில்’ என்று சொல்லி திபெத் மலைப் பகுதிகளில் வீட்டு மனைகள் விற்கப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். விஷயம் அப்படி. ஆக்ஸிஜன் குறைவாகக் கிடைக்கும் மலைப் பகுதிகளில் வசிப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்கிறது சீன ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு ஆய்வு. குன்மிங் வாழ்க்கை அறிவியல் கல்லூரி மற்றும் சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஜாங் யாபிங், வு டாங்டாங் எனும் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. திபெத் பீடபூமியில் வசிக்கும் முதியவர்கள், சீனாவின் பிற பகுதிகளில் வாழும் முதியவர்களைவிட அதிக ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
சீனாவின் 2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளை ஆராய்ந்தபோது, 60 வயதுக்கும் மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையில் சீனாவின் ஹான் இன மக்களைவிட, திபெத் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
எனினும், 90 வயதுக்கும் மேற்பட்ட திபெத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதுதான் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 100 வயதைத் தாண்டிய ஆண்களும் அங்கு அதிகம் என்றும் தெரியவந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடர் பகுதி மக்கள் நீண்ட ஆயுள் கொண்டிருப்பதற்கும், அவர்கள் உயரமான மலைப் பகுதிகளில் வாழ்வதற்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ‘செல் ரிஸர்ச்’ எனும் அறிவியல் இதழில் சமீபத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி, உயரம் செல்லச் செல்ல ஆக்ஸிஜன் குறைந்துவிடும் - சுவாசமே பாதிக்கப்படும் என்றுதானே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மலைப் பகுதி மக்கள் எப்படி மார்க்கண்டேயர்களாக இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். முதுமையடைதல் தொடர்பான ஜீன்களின் பரிணாம வளர்ச்சியை, ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் சூழல்கள் முடுக்கிவிடும் என்று விளக்கம் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இது முதுமையடைதலைக் கட்டுப்படுத்தி, ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்றும் சொல்கிறார்கள். மேகங்கள் தவழும் பிரதேசத்தில் நீண்ட நாட்கள் வாழ்வதும் ஒரு சுகம்தான்!
- சந்தனார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT