Last Updated : 07 Jan, 2014 01:49 PM

 

Published : 07 Jan 2014 01:49 PM
Last Updated : 07 Jan 2014 01:49 PM

டி.எம்.இ., டீன் பதவிகளுக்கு கடும் போட்டி: ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் டீன்கள் இல்லை

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் (டி.எம்.இ.) மற்றும் அரசு பொது மருத்துவத் தலைவர் – சென்னை மருத்துவக் கல்லூரித் தலைவர் (டீன்) பதவிகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ) கட்டுப்பாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலைவர் பதவி பல மாதங்களாக காலியாக உள்ளது. இதனால், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிகள் முடங்கியுள்ளன.

கூடுதல் பொறுப்பு:

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த வம்சதார ஓய்வு பெற்ற பிறகு, அந்த பதவியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியின் தலைவர் வி.கனகசபை நியமிக்கப்பட்டார். இவர் அரசு பொது மருத்துவமனை பணிகள், சென்னை மருத்துவக் கல்லூரி பணிகள் மற்றும் கூடுதலாக மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநர் பணிகளை கவனித்து வருகிறார்.

வி.கனகசபை ஓய்வு:

நிரந்தர மருத்துவக் கல்வி இயக்குநர் இல்லாததால், 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், வி.கனகசபை வரும் 31-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதனால், அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரித் தலைவர் பதவியும், மருத்துவக் கல்வி இயக்ககம் இயக்குநர் பதவியும் காலியாக உள்ளன.

பதவிக்கு கடும் போட்டி:

மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநர் பதவிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் கீதா லட்சுமி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் விமலா, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் வள்ளிநாயகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை செயலாளர் சுகுமார் ஆகியோர் கடும் போட்டி போடுகின்றனர். இதே போல, அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி தலைவர் பதவிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் கீதா லட்சுமி உள்பட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் ஒப்புதலுடன்தான் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் நியமிக்கப்படுவார். ஆனால், மருத்துவமனைத் தலைவர்களை அமைச்சரே பதவி உயர்வு மூலம் நிரப்ப முடியும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள தலைவர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x