Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM
சென்னை பட்டினப்பாக்கத்தில் கோடி ரூபாய்க்கு சொகுசு வீடுகளை வாங்க யாரும் முன்வரவில்லை. எனவே, வீட்டின் அளவை குறைப்பதன் மூலம் விலையைக் குறைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், பட்டினப்பாக்கத்தில் சுயநிதி திட்டத்தின் கீழ் உயர் வருவாய் பிரிவினருக்காக மொத்தம் 560 சொகுசு வீடுகள் கொண்ட குடியிருப்புகளை கட்டவுள்ளது. குறைந்தபட்சம் 916 சதுர அடி முதல் அதிகபட்சம் 1501 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த குடியிருப்பு, தரை தளத்தில் கார் நிறுத்தும் வசதி மற்றும் 5 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
கடலோர காவல்படை அதிகாரிகள் 80 வீடுகளை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டனர். அதுபோக, 480 வீடுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாள் வரை மிகக் குறைந்த விண்ணப்பங்களே வந்ததால், இப்போது டிசம்பர் 6-ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று, 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை 5 பேர் மட்டுமே முன்பதிவு
இதுவரை 100 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதில், 5 பேர் மட்டுமே முன்பணம் செலுத்தி பதிவு செய்திருக்கிறார்கள்.
பொதுவாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சுயநிதித் திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொடுப்பதாக விளம்பரம் செய்தால், அதற்கு அமோக வரவேற்பு இருக்கும். ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிந்துவிடும். ஆனால், சென்னையின் மையப் பகுதியாகவும், கடற்கரையோரத்திலும் அமைந்துள்ள பட்டினப்பாக்கத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
916 சதுர அடி வீடு ரூ.1.21 கோடி
இதுகுறித்து விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன. பொதுவாக குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற முழக்கத்தை முன்வைத்தே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இதுநாள் வரை செயல்பட்டு வந்தது. இப்போது தனியாரைப் போல வணிக நோக்கத்துடன் செயல்படுவதே இதற்கு காரணம் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
பட்டினப்பாக்கத்தில் வீடுகள் பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 916 சதுர அடியுள்ள இரண்டு படுக்கையறை வீட்டின் உத்தேச விலை ரூ.1 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் என்றும், 1501 சதுர அடியுள்ள 3 படுக்கையறை வீட்டின் உத்தேச விலை ரூ.1 கோடியே 99 லட்சத்து 2 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே அதிக விலை என்றும், இறுதிக்கட்ட விலை நிச்சயம் மேலும் அதிகரிக்கும் என்பதால் செல்வந்தர்கள் கூட விண்ணப்பிக்க தயங்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.45 லட்சம் வரை வருமான வரி கட்டும் திறன் கொண்டவர்களே பட்டினப்பாக்கம் வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது என்று சிலர் கூறினர்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி வீடு வாங்கி அதை வாடகைக்கு விடுவதென்றாலும் இப்பகுதியில் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம்தான் வாடகை கிடைக்கும். ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு பைசா வட்டி என்றாலும் ரூ.1 லட்சம்தான் கிடைக்கும். வட்டி அளவுக்குக் கூட வாடகை கிடைக்காது. இதுபோல சிந்திப்பவர்கள், வீடு வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டுவிட்டனர்.
தயாராக 45 ஆயிரம் வீடுகள்
இப்போது சென்னையில் மட்டும் 45 ஆயிரம் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் விற்பனைக்காக காத்திருக்கின்றன. அதனால்தான் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படவுள்ள வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டினப்பாக்கம் அருகே உள்ள ஆர்.ஏ.புரத்தில் ஒருசதுர அடி தனியார் விற்பனை விலை ரூ.22 ஆயிரம். ஆனால், அதனருகில் உள்ள பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டின் ஒருசதுர அடி விலை ரூ.13 ஆயிரம். தனியாருக்கும் எங்களுக்கும் ரூ.9 ஆயிரம் வித்தியாசம் உள்ளது. சென்னையின் மையப் பகுதியில் இவ்வளவு குறைந்த விலைக்கு வேறுயாரும் விற்பனை செய்ய முடியாது. அதனால் பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய வீடுகள் விலை மிக அதிகம் என்று சொல்வதை ஏற்க முடியாது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டின் சதுர அடி பரப்பை குறைத்து, கூடுதலான வீடுகளை சற்று குறைந்த விலைக்கு விற்பது குறித்தும் வாரியம் பரிசீலிக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT