Published : 16 Jun 2017 10:09 AM
Last Updated : 16 Jun 2017 10:09 AM

தூர்ந்து கிடக்கும் ராஜகேசரி பெருவழி

பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய ராஜகேசரி பெருவழி பாதையும் அதை அடையாளப்படுத்தும் அறிவிப்புப் பலகையாய் நிற்கும் தொன்மைமிகு வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

20 பெருவழிப்பாதைகள்

இப்போது தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதைப் போல பண்டைக்காலத்தில் வணிகம், போக்குவரத்து, படையெடுப்பு உள்ளிட்ட உபயோகங்களுக்காக மன்னர்கள் பெருவழிகளை அமைத்தார்கள். அப்படி அமைக்கப்பட்டதில் கொங்கு மண்டலத்தில் மட்டும் ராஜகேசரி பெருவழி, அசுர மலைப் பெருவழி, சோழமாதேவி பெருவழி, அதியமான் பெருவழி உள்ளிட்ட இருபது பெருவழிகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் இப்போது இவற்றில் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை. இந்த நிலையில்தான் ராஜகேசரி பெருவழியை சீரமைத்து பாதுகாப்பது குறித்து கோரிக்கை எழுந்திருக்கிறது.

கோவையில் உள்ள மதுக்கரை மலைக்காட்டு மலைச் சரிவில் செல்லும் ராஜகேசரி பெருவழியானது சோழ - சேர நாடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருந் துள்ளது. மேற்குக் கடற்கரையையும் பூம்புகாரையும் இணைக்கும் இந்த பெருவழி மூலமாகத்தான் ரோமானியரும் கிரேக்கர்களும் வாணிபத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். ராஜகேசரி பெருவழியானது கி.பி 871 - 907 கால கட்டத்தில் ஆதித்திய சோழன் காலத்தில் முப்பது அடி அகலத்துக்கு செப்பனிடப்பட்டதாக தகவல் உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தப் பெருவழியானது இப்போது ஆக்கிரமிப்பு களால் சூழப்பட்டு அடைபட்டுள்ளது.



கரையும் கல்வெட்டு

பாதை கேட்பாரற்று போனதால் பாதையின் பெருமை சொல்லும் கல்வெட்டும் அதிலுள்ள எழுத்துக்களும் மழை மற்றும் வெயிலால் அழிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே கல்வெட்டையும், பெருவழிப் பாதையையும் மீட்டெடுத்து, வருங்கால சந்ததிக்கு நம் வரலாற்றை புரியவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் கோவை மக்கள். இதற்காக மதுக்கரை மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மதுக்கரை மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகியான சண்முகம் பேசினார். “இந்தப் பாதையானது கோவை பேரூர் செட்டிபாளையத்திலிருந்து சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் வழியாக அய்யாசாமி மலைகளை கடந்து எட்டிமடை, மாவூத்தம்பதி சென்று வாளையாறு, பாலக்காடு செல்ல மன்னர் காலத்தில் பெருவழியாக விளங்கியதாக தொல்லியல்துறை ஆவணங்களில் உள்ளது. பெருவழியின் ஒரு பகுதியில் உள்ள அய்யாசாமி மலை வனத்துறையிடம் வந்துவிட்டது. அதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் சிக்கிக் கொண்டுவிட்டன.

இதனால், ராஜகேசரிப் பெருவழிக்கு ஆதாரமாக உள்ள கல்வெட்டுகளும் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. மிச்ச அடையாளமாக உள்ளது இந்த கல்வெட்டு மட்டும்தான். இப்படியே விட்டால் இதுவும் அழிந்துவிடும். எனவே, ராஜகேசரிப் பெருவழியை திறந்து விடுவதோடு, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும். மக்கள் புழக்கம் ஏற்பட்டால் இந்தக் கல்வெட்டு உள்ளிட்ட தொல்லியல் அடையாளங்களும் பாதுகாக்கப்படும். இதற்காக நாங்கள் பத்து ஆண்டுகளாக போராடியும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது’’ என்று சொன்னார் சண்முகம்.

வரலாறே துண்டிக்கப்பட்டது போல்..

இப்பகுதியை சேர்ந்த முன்னாள் வட்டாட்சியரும், கோவை மாவட்ட கலை இலக்கிய பெருமன்ற தலைவருமான வி.சுப்பிரமணியம் கூறுகையில், “கல்வெட்டில் வரும் ராஜகேசரி முதலாம் ஆதித்திய சோழன் ஆவான். அவனுடைய புகழே சோழப்பேரரசு குடியை வாழ்த்திப்பாடுவதாக கல்வெட்டில் வெண்பா வடிவில் இடம் பெற்றுள்ளது. இந்த கல்வெட்டு பொறிப்புக்கு எதிரே உள்ள மலையில் 30 அடி அகலத்தில் கற்களால் ஆன பண்டைய பெருவழிச்சாலை இருந்திருக்கிறது என்றும் அதில் குறிக்கப்பட்டுள்ளது.

கொச்சி வரை செல்லக்கூடிய பண்டைய காலப் பெரு வழிப்பாதை இப்படி குறிப்பிட்ட பகுதியில் மட்டும் துண்டிக்கப் பட்டிருப்பது வரலாற்றையே துண்டித்தது போலாகும். எனவே இந்தப் பாதையை மீட்டெடுப்பதுடன் கல்வெட்டையும் தொல்லியல் துறை பத்திரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்கால சந்ததிக்கு இப்படியொரு பெருவழி இருந்ததே தெரியாமல் போய்விடும்.’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x