Published : 08 Feb 2014 11:02 AM
Last Updated : 08 Feb 2014 11:02 AM

காவல் ஆணையருக்கு ஆறுதல் சொன்ன அதிமுக எதிர்கோஷ்டி!

கடந்த சில நாட்களாக வதந்தியாக வலம் வந்த விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது. தமிழகத்தில், காவல்துறை அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாநகர் காவல் ஆணையர் செந்தா மரைக்கண்ணனும் இடமாற்றம் செய்யப்பட்டது தற்போது விவாதத்துக்கு உரியதாகிவிட்டது.

வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனோடு அனுசரித்துப் போகாதாதது தொடங்கி, சாலையின் மையத் தடுப்பில் கட்சிக் கொடியை நட்டுவைத்தது தொடர்பாக அதிமுகவினர் 6 பேர் மீது வழக்கு போட்டது வரை நகரின் பரபரப்பான விவாதத்துக்கு உரியவரானார் செந்தாமரைக்கண்ணன்.

இப்பிரச்சினையில், ஆனந்த னுக்கும் செந்தாமரைக்கண்ண னுக்கும் பனிப்போர் உச்சத்தை எட்டிய நிலையில், அதிமுகவினர் மீது புகார் அளித்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார். அமைச்சர் தரப்பும், காவல் ஆணையர் தரப்பும் சென்னை வரை சென்று தங்களது மேலிடத்துக்கு விளக்கம் அளித்தபடி தத்தமது வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயம் அவர் எதிர்பார்க்காத ஒன்றுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தமிழகத்தில் இருசக்கர வாகன விற்பனையில் முன்னி லையில் இருக்கும் முக்கிய நகரமான திருப்பூரில் வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என இவரால் அமல்படுத்தப்பட்ட திட்டம் இருவேறு விவாதங்களை எழுப்பியது. அனைத்துக் கட்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தரப்பு, தமிழக முதல்வரிடம் தங்களது தரப்பு நியாயங்களை முன்வைத்தபோது முதல்வரின் முகத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை என்கின்றனர் கட்சிப் பிரமுகர்கள். இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், சென்னையில் தேர்தல் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் செந்தாமரைக்கண்ணன். இது குறித்து காவல்துறை தரப்பில் பேசியபோது கிடைத்த தகவல்கள்:

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என தீவிர முயற்சி எடுப்பதாக இருந்தார். இதனால் திருப்பூரின் குற்றங்கள் பெருமளவு குறைக்கப்படும் என மிகவும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதற்குள் இடமாற்றம் செய்துவிட்டனர்.

இதற்கிடையே, இவரது இடமாற்றம் காவல்துறையினர் மத்தியில் ஒருவித சந்தோஷத் தையும் ஏற்படுத்தி இருப்பதாக அதிர்ச்சித் தகவல்களையும் பகிர்ந்தனர். ஆயுதப்படையில் முறைகேடாக நடந்துகொண்ட 2 காவலர்களுக்கு கடுமையாக எச்சரித்து தண்டனை வழங்கிய தாகத் தெரிகிறது. காவல் ஆணையர் இடமாற்றம் தெரிந்ததும் அவருக்காக திருப்பூர் மாநகர் காவல் பகுதியில் பணியாற்ற வந்த காவல் அதிகாரிகள் பலரும் தங்களது பழைய இடத்துக்கே திரும்ப முடிவு செய்துவிட்டனராம். ஆணையர் கிளம்பும் சில மணி நேரங்களுக்கு முன்பு (வெள்ளிக்கிழமை) காவலர்கள் சிலருக்கு ரிவார்டு வழங்கி இன்ப அதிர்ச்சியையும் அளித்துவிட்டுக் கிளம்பியுள்ளார் செந்தாமரைக் கண்ணன்.

இவரது இடமாற்றம் வெளியான சில மணி நேரங்களில் ஆனந்தனுக்கு எதிர்கோஷ்டி அதிமுகவினர் சிலரும், சரத்குமார் கட்சியை சேர்ந்த சிலரும் செந்தாமரைக் கண்ணனை சந்தித்து ஆறுதல் கூறினராம். அமைச்சர் - ஆணையர் பனிப்போர் முதல்வர் வரை சென்றுவிட்டதால், ஆணையர் இடமாற்றத்தை பெரிதுபடுத்தி மேலும் பொல்லாப்பு தேடிக் கொள்ள வேண்டாம் என்பதால் சற்று அடக்கி வாசித்துள்ளது அதிமுக. இந்த இடமாற்றப் பிரச்சினையில், திருப்பூர் அதிமுக வினரின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது அதிமுக தலைமை என்பதுதான் நிதர்சனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x