Published : 07 Feb 2014 06:55 PM
Last Updated : 07 Feb 2014 06:55 PM
மனிதர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தும் பாம்புகளும் உயிர் சமநிலையில் ஒரு அங்கம். ஆனால், பாம்பை கண்டால் கொல்ல வேண்டும், இல்லையென்றால் அங்கிருந்து அலறி அடித்து ஓடிவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவியுங்கள். பாம்பை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தலாம் என்ற குரலை கேட்க முடிகிறது. ஆனால், பாம்பை பிடித்து வனப் பகுதியில் கொண்டு சென்றுவிடும் திட்டம் மக்களிடம் போதுமான அளவு வெற்றியடையவில்லை என்றே கூறப்படுகிறது.
வன உயிரினங்களைக் காக்க வேண்டிய வனத்துறையினரின் பெரும்பாலோருக்குக்கூட பாம்புகள் பிடிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை.பாம்பை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினரை அழைக்கும் போது, வனத்துறையினர் நாடுவது தன்னார்வமாக பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் நபர்களைத்தான்.
ஆனால், பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பிற்காக எவ்வித பாதுகாப்பு உபகரணங்களோ, போதிய ஊதியமோ வழங்கப்படுவது இல்லை.
பாம்பு கடித்தால் முதலுதவி அளிப்பதற்கு மருத்துவப் பொருள்கள் கூட அருகில் இல்லாத நிலையில்தான் பாம்பு பிடிப்பவர்களின் நிலை இருந்து வருகிறது. முதலில் சாகசத்திற்காக பாம்புகளை கையில் பிடித்து பின்னாளில் குடியிருப்புகளில் சுற்றித் திரியும் பாம்புகளை அப்புறப்படுத்தி வனத்தில் விடும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர் இந்த பாம்பு களின் நண்பர்கள்.
ஆனால், இந்த தொழிலில் போதிய வருமானம் கிடையாது. அதனால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கடைசிவரை பாம்புகளை காக்கும் பணியில் தொடர்கின்றனர். பலர், பாம்பு பிடிப்பதையே விட்டுவிட்டு செல்லும் நிலையில்தான் தற்போது நீடிக்கிறது. காடுகள், வனங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் உருவெடுத்துள்ள நிலையில் பாம்புகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன.
தற்போது புலியை காக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போல பாம்புகளைக் காக்கவும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை. ஆனால், பாம்புகளின் கூட்டமே அதற்குள் அழிவைச் சந்தித்து விடும் என்று பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தன்னார்வமாக பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறும்போது, சிறுவயதில் சாகசத்தினால் பாம்புகளை தொட்டு, பின்னர் பாம்புகளை காக்க வேண்டும் என்ற துடிப்பில் இந்த தொழிலுக்கு வந்தேன். பாம்புகளை நன்கு அறிந்த வகையில், எல்லா பாம்புகளும் மனிதர்களைத் தேடி வந்து கடிப்பது இல்லை. மனிதர்கள் அதனை தொந்தரவு தரும் பட்சத்தில் மட்டுமே தாக்குகிறது.
ஆனால், அதனை புரிந்து கொள்ளாமல் தூரத்தில் பாம்பைக் கண்டால் கூட அதனை கொன்றுவிட்டுதான் மறுவேலையை பார்ப்பதற்கு செல்கின்றனர். பாம்புகள் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததுதான் பாம்புகள் கொல்லப்படுவதற்கு காரணம். மேலும், பாம்பை அப்புறப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் எங்களைப் போன்றவர்களை வனத்துறையினர் கூட சரியான வரவேற்பு அளிப்பதில்லை.
போதிய வருமானம் கிடைக்காததால் முழு தொழிலாக மேற்கொள்ள முடியவில்லை. ஒரு பாம்பை பிடித்துக் கொடுத்தால் வனத்துறையினர் கூட எதுவும் தருவதில்லை. பொதுமக்கள் ரூ. 50 முதல் ரூ. 100 வரை கொடுப்பார்கள். சிலர் எதுவம் கொடுப்பது இல்லை. இதனால், வாழ்க்கைக்காக ஒரு தொழிலையும், என் ஆசைக்காக பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வருகிறேன்.
வனத்துறையினர் பாம்பு பிடிக்க கூட்டிச் செல்லும்போது முதலுதவி சிகிச்சைக்கு கூட மருத்துவ உபகரணங்கள் வைத்திருப்பது இல்லை. பாம்பு பிடிப்பவர்களையும் வனத்துறையில் பணியாளர்களாக சேர்க்க வேண்டும் என்றார். துயரத்தில் சிக்கியுள்ள பாம்பு பிடிப்பாளர்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமா அரசு?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT