Published : 13 Oct 2014 03:41 PM
Last Updated : 13 Oct 2014 03:41 PM

‘புதிய பயணத்துக்கு வாசகர்களை ‘தி இந்து’ தயார்படுத்தியுள்ளது’

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் கலை விமர்சகர் தேனுகா பேசியபோது, “நாளிதழ் உலகில் ஒராண்டு என்பது சாதாரணமல்ல. ஆனால், புரியாத தகவல்களையும் ஓராண்டிலேயே கரைத்துக் குடித்த மாதிரி பிரமிப்பு ஏற்பட்டுள்ளது. ‘தி இந்து’ என்பதாலே இது ஒராண்டில் சாத்தியமாயிற்று. சீரியஸான விஷயங்கள் விலைபோகுமா? வாசகர் படிப்பார்களா என யோசித்த நிலையில் வாசகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததற்கு அதன் உள்ளடக்கமே காரணம். அதன் உச்சம் என நடுப்பக்க கட்டுரைகளை சொல்லலாம்.

‘தி இந்து’வை கையில் வைத்திருப்பதே ரொம்ப பெருமையாக இருக்கிறது என வாசகர்கள் கூறுகின்றனர். சீரியஸான விஷயங்களைச் சொல்வதன் மூலம் வாசிப்பில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்திகளின் உள்ளடக்கம், நம்பகத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் ‘தி இந்து’ புதிய பயணத்துக்கு வாசகர்களை தயார்படுத்தியுள்ளது.

நீர், நிலம், வனம் தொடரால் நீரைப் பற்றி அறியாதவர்களும் கடலோடிகளின் வாழ்வில் உள்ள சிக்கல்களை அறிந்துகொள்ள முடிந்தது. இதேபோன்று நம்மிடையே பிரபலமாகாத பல ஆளுமைகள் உள்ளனர். இதுகுறித்து பயணம் மேற்கொண்டு அவர்களைப் பற்றி எழுதவேண்டும். அதேபோல பெரியவர்களிடம் வெளியே வராத பல மதிப்புமிக்க தகவல்கள் உள்ளன. அவற்றை ஆவணப்படுத்தவேண்டும்.

தஞ்சாவூர் ஒரு கலாசார மையம், கலாசார ஊற்று. இங்கு பல கலைகள் தோன்றிச் சிறந்து விளங்குகின்றன. அவற்றில் சிறந்த பல கலைஞர்களும் இங்குள்ளனர். கலையையும், கலாசாரத்தையும் போற்றும் தஞ்சையில் ‘தி இந்து’வின் வாசகர் திருவிழா நடப்பது மிக பொருத்தமான ஒன்றாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x