Published : 04 Jan 2014 08:12 PM
Last Updated : 04 Jan 2014 08:12 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகால வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களை ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாய விளைநிலங்கள் வீட்டுமனைகளாகி வருவதால் சாகுபடி பரப்பு படிப்படியாகச் சுருங்கி உணவு உற்பத்தி வீழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் விளைநிலங்கள் விற்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 2,36,682 ஹெக்டேர் நிலத்தில் தோட்டக்கலை, வேளாண்மை பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இவற்றில் இறவை முறையில் 1,14,878 ஹெக்டேரிலும், மானாவாரியாக 1,21,804 ஹெக்டேரிலும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள், பூக்கள், கரும்பு, சோளம், வெற்றிலை, ஆரஞ்சு மற்றும் மலைப்பயிர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மாவட்டத்தில் ஆண்டிற்கு 836 மி.மீ., வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 450.91 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.
47 சதவீதம் மழை வீழ்ச்சி அடைந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டதால் வறட்சியால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். மாவட்டத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லாததால் தோட்டக்கலை, வேளாண்மைத் துறை பயிர்களைக் காப்பாற்ற வழி தெரியாமல் விவசாயிகள் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் சாகுபடி செலவுக்கு வாங்கிய வங்கிக் கடனை அடைக்க முடியவில்லை. உரக்கடைகளில் வாங்கிய உரம், பூச்சி மருந்து கடனையும் அடைக்க முடியவில்லை. வங்கிகளில் வைத்த நகைகளையும் திருப்ப முடியவில்லை. வீடுகளில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கையில் பணம் இல்லாமல், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
அதனால், விவசாயிகள் கடனில் இருந்து மீளவும், அன்றாட குடும்பச் செலவுகளை ஈடுகட்டவும் விளைநிலங்களை விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், இறவை, மானாவாரி விவசாய நிலங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் சத்தமில்லாமல் விவசாயிகள் விற்பனை செய்து வருவதால் சாகுபடி பரப்பு சுருங்கி வருகிறது. திண்டுக்கல் வெள்ள பொம்மன்பட்டி விவசாயி வெள்ளைச்சாமி கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், மலைமறைவு பிரதேசமாக உள்ளதால் பருவமழை பெய்வது குதிரைக் கொம்பாக உள்ளது. கடந்த பத்து ஆண்டில், மூன்று ஆண்டிற்கு ஒருமுறை வறட்சி ஏற்படும். ஆனால், இதுபோன்ற வறட்சி கடந்த 50 ஆண்டில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐந்து ஆண்டிற்கு முன் வரை, திண்டுக்கல் மாவட்டத்தில் திரும்பிய திசையெல்லாம் செழுமையாகக் காணப்பட்டது. இந்த மாவட்ட விவசாயிகள், சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், தொடர்ந்து வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இல்லை.
பக்கத்து நிலங்கள் லட்சம் ரூபாய்க்கு விற்கும்போது கடனை அடைக்க விவசாயிகள் தங்கள் நிலத்தையும் விற்று வருகின்றனர். மற்ற தொழில்களில் போட்ட முதலீட்டை எடுப்பதற்கு உத்தரவாதம் உள்ளது. விவசாயத்தில் போட்ட முதலீட்டை எடுக்க மழை பெய்ய வேண்டும். அறுவடை செய்த விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். ஆனால், நிலத்தில் பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. ஆனால், உழைப்பையோ முதலீட்டையோ செய்யாத இடைத்தரகர்களான வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
தற்போது வறட்சி, விலை வீழ்ச்சி இரண்டும் விவசாயிகளை ஆட்டிப் படைப்பதால் கடன் சுமையால் விவசாயிகள் தாக்குப் பிடிக்க முடியாமல் விளைநிலங்களை விற்பனை செய்கின்றனர். அரசும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற விளைபொருள்களின் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகாவில் விளைநிலங்களை விற்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
தமிழகத்தில் சட்டமும், கட்டுப்பாடும் இருந்தும் கண்காணிப்பு நடவடிக்கை இல்லாததால் யார் வேண்டுமென்றாலும் எந்த நிலத்தையும் விற்கும் அவலம் உள்ளது. தற்போது பெரும்பாலான கண்மாய்கள், ஏரிகள் மாயமாகி விட்டன. இன்னும் 50 ஆண்டில் மொத்த விவசாயிகளும் மாயமாகி, கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாயம் செய்யும் அவலம் ஏற்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT