Published : 24 Jan 2014 07:20 PM
Last Updated : 24 Jan 2014 07:20 PM

ஈரோடு: கணக்கு காட்டுவதற்காக செய்யப்படுகிறதா கண்புரை அறுவை சிகிச்சை?: இலக்கு நிர்ணயிப்பதால் உதவியாளர்கள் கண்ணீர்!

கண்புரை அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கு மாதந்தோறும் இலக்கு நிர்ணயித்து, அதற்கென ஆட்களை பிடித்து வருமாறு, அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற நிர்பந்தங்களால், நாமக்கல், தென்காசி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில், பலர் பார்வையிழந்த அவலம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் தேசிய பார்வையிழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், பார்வையிழப்புக்கு காரணமான கண்புரையை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக இதற்கான நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இலக்கு நிர்ணயம்

ஒவ்வொரு மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மாதந்தோறும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதில், தனியார் மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு பகுதிகளில், இலவச முகாம்களை நடத்தி நோயாளிகளை கண்டறிகின்றனர். இவ்வாறு தனியார் கண் மருத்துவமனைகள் நடத்தும் ஒவ்வொரு கண்புரை அறுவைச்சிகிச்சைக்கும், ரூ. 1000 வரை மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார்

மருத்துவமனைகளில் உள்ள வசதிகளால், அங்கு இலவச கண்புரை அறுவைச்சிகிச்சை செய்து கொள்ளவே பெரும்பாலனவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஆட்களை தேடிப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசு மருத்துவமனையில் வசதி குறைவு, நம்பிக்கையின்மை காரணமாக இங்கு அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.

மன உளைச்சல்

சராசரியாக, அரசு சுகாதாரத் துறையில், ஒரு மாவட்டத்திற்கு, 1000 முதல் 1500 கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுவதாகவும், ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படும் இந்த இலக்கு வட்டாரம் வாரியாக பிரிக்கப்பட்டு, தலைமை அரசு மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும், கண் மருத்துவ உதவியாளர்கள் இந்த இலக்கை அடைய வற்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆள்பிடிக்கும் பணியால், தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, மற்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை நிலவுவதாக கூறுகின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.

இதுகுறித்து அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்க செயலாளர் சுகுமார் கூறுகையில், “வட்டாரங்களில் பணியாற்றும் கண் மருத்துவ உதவியாளர்கள் ஒவ்வொருவரும், மாதந்தோறும் 10 முதல் 20 கண்புரை நோயாளிகளை அறுவைச்சிகிச்சைக்காக பிடித்து

வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில், இது போன்று இலக்கு நிர்ணயிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உதவியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரததுறை செயலரை சந்தித்து முறையிட்டபோது, அவரும் இலக்கு நிர்ணயிக்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், அதுவும் பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது” என்றார்.

நோயாளிகளின் விருப்பம்

கண்புரை அறுவைச்சிகிச்சை என்பது நோயாளிகளின் விருப்பத்தை சார்ந்தது என்ற நிலையில், அவர்களை கட்டாயப்படுத்தி அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதால், நாமக்கல், தென்காசி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில், பலருக்கு பார்வை பறிப்போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் இயங்கி வந்த நடமாடும் கண் சிகிச்சை குழு கடந்த சில மாதங்களாக செயல்படுவதில்லை. நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் கண் சிகிச்சை குழுவை, மாவட்டம்தோறும் செயல்படுத்தினால், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும், கண் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்களில் தகுதியானவர்களை அறுவைச்சிகிச்சைக்கு தேர்வு செய்யவும் முடியும் என்கின்றனர் கண் மருத்துவ உதவியாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x