Published : 20 Oct 2014 06:44 PM
Last Updated : 20 Oct 2014 06:44 PM
“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூரை தொடர்ந்து திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் தொழிலதிபர் எச். வசந்தகுமார் பேசியதாவது:
“தி இந்து” தமிழ் நாளிதழ் இந்து மகா சமுத்திரம் போன்றது. ஏராளமான கருத்துகளை, தகவல்களை தாங்கி வருகிறது. ஒரு பத்திரிகை ஆரம்பிக்க அடிப்படை நோக்கம் என்ன என்பது முக்கியம். ஒரு நாளிதழை ஆரப்பித்தால் பொருளாதார ரீதியாக நடத்த முடியுமா என்பதும் முக்கியம். அந்த வகையில் இந்து ஆங்கில நாளிதழ் 1878-ல் நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
அனைத்து தமிழ் பத்திரிகைகளுமே தமிழை காப்போம் என்ற கோஷத்தோடுதான் தொடங்கப்பட்டுள்ளன. தமிழால் இணைவோம் என்ற கோஷத்தோடு “தி இந்து” தொடங்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகை தற்போது ஒரு குழந்தை. பாரம்பரியம் மிக்க இந்து குடும்பத்தில் இருந்து பிறந்திருக்கிறது.
ஆட்சியாளர்களை எதிர்க்கும் துணிவு தற்போது பத்திரிகைகளிடம் குறைந்து காணப்படுகிறது. பாரதி போல துணிச்சலோடு யாரும் இப்போது எழுதுவதில்லை. ஆனால் “தி இந்து” நாளிதழ் மக்களின் உணர்வுகளை புரிந்து செய்திகளை வெளியிடுகிறது. தமிழ் இந்து சார்பில் சென்னையில் நாடக விழா நடத்தப்படுகிறது. அதுபோல நெல்லையில் நாடக விழாக்களை நடத்தினால் மகிழ்ச்சியடைவோம்.
இந்துவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தாமிரவருணியில் மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து வறட்சியான பகுதிகளுக்கு திருப்பிவிடும் வகையில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற “தி இந்து” குரல் கொடுக்க வேண்டும். மேலும், மதுவை ஒழிக்க இந்துவோடு இணைந்து பணியாற்றுவோம் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT