Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM
‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்’ - இதுதான் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவிலுள்ள 4 கோடி சில்லறை வணிகர்களின் உறக்கத்திற்கு உலை வைத்திருக்கும் விஷயம்!
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 14.8.2011-ல் அமலுக்கு வந்தது. ஆனால், கடும் எதிர்ப்பால் இன்னும் இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இருந்தபோதும் வணிகர்களின் தலைக்கு மேல் கத்தியாய் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சட்டம்.
சட்டம் என்ன சொல்கிறது?
தரமற்ற, சத்துக் குறைவான உணவுப்பொருட்களை விற்றாலே தண்டனைக்குரிய குற்றம். ஒரு மளிகைக் கடைக்குள்ளோ, ஓட்டலுக்குள்ளோ கரப்பான் பூச்சி இருந்தால் உரிமையாளருக்கு லட்சரூபாய்வரை அபராதம் விதிக்கலாம். அதுவே எலியாக இருந்தால் அபராதம் ஐந்து லட்சம்! கடைகளில் தூசு இருந்தாலே சிறை என கடுமை காட்டுகிறது இந்தச் சட்டம்.
உணவுப் பொருட்களை தயாரிக்கும் இடங்களில் தரமற்ற தண்ணீரைப் பயன்படுத்தினால் தயாரிப்பாளருக்கு சிறை. மட்டன், சிக்கன், மீன் கடைகளை நடத்துபவர்கள் அந்தத் தெருவிற்கான மொத்த சுகாதாரத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். அறுக்கப்படும் ஆடுகளுக்கு எந்த நோயும் இல்லை என்று மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.
லைசென்ஸ் இல்லாவிட்டால் ஆறு மாதம் ஜெயில்
தெருவோரம் வாழைப்பழம், மோர், தயிர் போன்ற தலைதூக்கு வியாபாரம் செய்பவர்கள், 100 ரூபாய் செலுத்தி லைசென்ஸ் பெற வேண்டும். தவறினால், ஆறு மாதம் ஜெயில்; ஐந்து லட்சம் அபராதம்! பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள், அவைகள் எந்தவகை மாட்டின் பாலிலிருந்து செய்யப்பட்டவை, அவைகளுக்கு கொடுக்கப்பட்ட தீவனம் என்ன? என்பவற்றையும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை!
ஓட்டலில் சாப்பிட்ட ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே ஓட்டல் முதலாளிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதே நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால் தண்டனை ஆறு மாதங்கள்; அபராதம் ஐந்து லட்சம்! எதிர்பாராத விதமாக அந்த நபர் இறக்க நேரிட்டால் ஆயுள் தண்டனையும் பத்து லட்சம் அபராதமும் உறுதி. இப்படிப் பலவாறாக இந்தியச் சில்லறை வணிகர்களை மிரட்டுகிறது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி வணிகர்கள் எடுத்த எந்த அஸ்திரத்திற்கும் மத்திய அரசு மசியவில்லை.
வணிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ‘தி இந்து’விடம் தெரிவித்ததாவது:
‘டீ கிளாஸை மினரல் வாட்டரில் கழுவு, இறைச்சிக்காக ஆடுகளை அறுக்கும்போது அவை மன உளைச்சல் இல்லாமல் (சந்தோஷமாக!) இருந்ததாக அதிகாரிக்கிட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கு’ன்னு புதுச்சட்டம் சொல்லுது. விட்டால், ஆட்டுக்கிட்டேயே என்.ஓ.சி. வாங்கணும்னு சொல்லுவாங்க போலிருக்கு.
21 கோடி பேர் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்
வெளிநாடுகளில் இத்தகைய சட்டம் அமலில் இருக்குன்னா அங்கெல்லாம் அரசாங்கம் அனைத்து சுகாதார வசதிகளையும் செய்து கொடுக்குது. ஆனால், இங்கே அப்படியா இருக்கு? சாக்கடையும், குப்பைகளும் பெருகுவதால்தானே எலிகளும் கரப்பான்களும் பெருகுது. அரசாங்கம்தான் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கச் சொல்கிறது. இதனால்தான் விளைபொருட்கள் நச்சுத் தன்மையுடன் விற்பனைக்கு வருது. இதற்கு வியாபாரிகள் என்ன செய்வார்கள்?
எதைச் சரிசெய்ய வேண்டுமோ அதை எல்லாம் விட்டு விட்டு, தடையற்ற மின்சாரத்தையும் சாலை வசதிகளையும் தந்து பன்னாட்டுக் கம்பெனிகளை வரவேற்கும் அரசாங்கம், உள்நாட்டு சிறு வணிகர்களை நசுக்கப் பார்க்கிறது. சட்டம் அமலுக்கு வந்தால் தமிழகத்தில் 15 லட்சம் சில்லறை வணிகர்களும் இந்தியா முழுக்க 4 கோடி சில்லறை வணிகர்களும் அவர்களை சார்ந்திருக்கும் 21 கோடி பேரும் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.
இந்தியா முழுவதும் தொடர் கடையடைப்பு போர்
கடந்த மார்ச்சில் சுமார் 8,000 வணிகர்களை திரட்டி டெல்லியில் மாநாடு போட்டு மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் மனு கொடுத்தோம். பிப்ரவரி வரை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்னு உறுதி கொடுத்தார். ஆனால், கேரளாவில் சட்டம் அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அதற்கான நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன. மத்திய பிரதேசத்தில் வணிகர்கள் ஏழு நாட்கள் கடையடைப்பு நடத்தியதால் அம்மாநில அரசு பின்வாங்கிவிட்டது. அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் தொடர் கடையடைப்பு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT