Published : 04 Feb 2014 09:19 PM
Last Updated : 04 Feb 2014 09:19 PM
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பாளையங் கால்வாய் பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளதால் கடைமடை பகுதிகளில் 10,000 ஏக்கர் பாசனம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
7 கால்வாய்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில், பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் வழிந்தோடும் 7 கால்வாய்கள் மூலம், 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. இதில், முக்கியமான கால்வாயாக பாளையங் கால்வாய் இருக்கிறது. தாமிரவருணி ஆற்றில், பழவூர் தடுப்பணையில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய், 43 கி.மீ. நீளமுள்ளது. இக்கால்வாய் மூலம், 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சேர வேண்டும். அவ்வாறு தண்ணீர் சென்றால்தான்ம் அந்த குளத்தை நம்பியிருக்கும் நிலங்களில் விவசாயம் செய்ய முடியும்.
பாளையங்கால்வாய் தண்ணீர் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் மட்டும் 162 மடைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஷட்டர்கள் எங்குமில்லை. இதனால், ஆங்காங்கே தண்ணீர் கசிந்து விரயமாவது தொடர் கதையாகவே நீடிக்கிறது.
ஆகாயத்தாமரை
கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆகாயத்தாமரைச் செடிகள், கால்வாய் முழுக்க ஆக்கிரமித்து செழித்து வளர்ந்திருக்கின்றன. இதனால், கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. 56-வது குளமான நொச்சிக்குளம், 57-வது குளமான சாணான்குளம் ஆகியவற்றுக்கு, தண்ணீர் சேராததால், இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப்போயிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக பாளையங் கால்வாயின் கடைமடை பகுதியில் கார் பருவ விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இச்செடிகள் கால்வாயில் செழித்து வளர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, திருநெல் வேலியில் மாநகராட்சி கழிவுகளும், சாக்கடையும், பாளையங் கால் வாயில் கலப்பதுதான். சாக்கடை கழிவுகளால் செழித்து வளரும் ஆகாயத்தாமரை செடிகள், ஆங்காங்கே மடைகளையும், பாலங்களிலும் அடைத்து தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் செய்கின்றன.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியை கடந்து செல்லும் இந்த கால்வாயில் அளவுக்கு அதிகமாக சாக்கடை கழிவுகள், பாலித்தின் குப்பைகள் கலக்கின்றன. குறிப் பாக, மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்களே, கால்வாயில் கழிவுகளை கொட்டு வருவது குறித்து, அப்பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாக்கடை கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், மாநகராட்சி தரப்போ, செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்துவிட்டது.
மாநகராட்சியில் ரூ. 65 கோடி யில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறாமல் விடப்பட்டதால், சாக்கடைகள் பாளையங்கால்வாயிலும், தாமிர பரணி ஆற்றிலும் கலப்பதையும் தடுக்க முடியவில்லை.
ரூ.7 லட்சம் வீண்
`கடந்த ஆண்டு பாளையங்கால் வாயில் அமலை செடிகளை அகற்ற ரூ.7 லட்சம் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது. ஆனால், முறையாக செடிகள் அகற்றப்படவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டு கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படவில்லை. மடைகளும் சீரமைக்கப்படவில்லை. கால்வாயில் மனித கழிவு, ஆடு,மாடு, கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுகின்றன’ என்று, பாளையங்கால்வாய் நீர் பகிர்மானக் குழு உறுப்பினர் ஆர்.கணேசன் தெரிவித்தார்.
கழிவுகளை கொட்டுவதால் இந்த கால்வாயில் குளிப்பவர்களுக்கு தோல்நோய், முடிகொட்டுதல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.
கீழப்பாட்டத்தில் பாதிப்பு
கடந்த வாரம், கீழப்பாட்டத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பாளையங்கால்வாய் கடைமடைப் பகுதி விவசாயிகள் பங்கேற்று தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கடைமடை பகுதி குளங்களுக்கு தண்ணீர் வராமல் இருப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர். இதுபோல், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் பாளையங்கால்வாய் பிரச்னை பேசப்பட்டுவருகிறது. ஆனால் அதற்கு தீர்வுதான் கிட்டவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT