Published : 25 Feb 2014 04:29 PM
Last Updated : 25 Feb 2014 04:29 PM

உதகை: பேரட்டி ஊராட்சியில் விதிமுறை மீறி பாறைகள் உடைப்பு? சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் காட்சிமுனை அமைப்பதற்காக தேயிலை தோட்டங்களில் பாறைகள் உடைக்கப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தை, உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் மாவட்டத்தில் விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாலும், கல் குவாரிகளின் செயல்பாடுகளாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கல் குவாரிகளுக்கும், பாறைகளை உடைப்பதற்கும் தடை விதிக்க பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கல் குவாரிகளுக்கும், பாறைகளை உடைக்கவும் தடை விதித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தடையை மீறி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாறைகள் உடைக்கப்பட்டு வருகிறது.

குன்னூரில் அத்துமீறல்

பேரட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராணி எஸ்டேட் பகுதியில் சொகுசு பங்களாக்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி தேயிலை எஸ்டேட், மலைகளை கொண்டது. குடியிருப்புகள் கட்டுவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இப்பகுதியிலுள்ள மலை வெடி வைத்து தகர்க்கப்பட்டதுடன், ஆறு திசை திருப்பிவிடப்பட்டது. குன்னூர் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் இந்த எஸ்டேட்டை ஒட்டிய டான் பாஸ்கோ பகுதியிலுள்ள தனியார் நிலங்களில் தற்போது பாறைகள் உடைக்கப்படுகின்றன. இப்பகுதி மலையின் உச்சியில் இருப்பதால், காட்சிமுனை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியிலுள்ள பாறைகள் உடைக்கப்பட்டதால், பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மலை அடிவாரத்தில் ராணுவ கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உள்பட்ட வண்டிச்சோலை பகுதி உள்ளது.

மலை மேலிருந்து மண், பாறைகள் உருண்டு விழுமோ என்ற அச்சத்தில் வண்டிச்சோலை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பேரட்டி ஊராட்சி தலைவர் ராஜேஷ்வரி தேவதாஸ் கூறுகையில் விதிமுறை மீறிய கட்டுமானங்கள் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. டான் பாஸ்கோ பகுதியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x