Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM
மின்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், தினசரி 9 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் தினமும் ரூ.130 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மீண்டும் மூடப்படும் அபாயம் உள்ளதால் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூற்பாலைகள், பஞ்சாலைகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், தோல் ஆலைகள், அரிசி, மாவு அரைவை தொழிற்சாலைகள், மர அறுவை ஆலைகள் உள்ளன. தனியார் தொழில், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள், தொழில் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் கடும் மின்பற்றாக்குறையால் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தொழிற்சாலை உரிமையாளர்கள் வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்த அவலம் ஏற்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் ஓரளவு மின்தடை நீங்கி ஆலைகள், தொழில் வர்த்தக நிறுவனங்கள், நூற்பாலைகள், பஞ்சாலைகள் தடையின்றி செயல்படத் தொடங்கின.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. குறிப்பாக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி காலை 9 மணி முதல் 12 மணி வரை, பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை, 11 மணி முதல் இருந்து 12 மணி வரை, அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை என மொத்தம் ஒன்பது மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. கிராமப் பகுதியில் மின்சாரம் வரும் நேரம், நிறுத்தம் நேரம் முறையில்லாமல் நீடிப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இரவில் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வத்தலகுண்டு உள்பட மாவட்டம் முழுவதும் தொழிற்சாலைகள் செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளன.
தொழிலாளர்கள் மின்சாரம் இல்லாததால் தொழிற்சாலைகளில் காலை முதல் மாலை வரை வேலையின்றி உள்ளனர். சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய ஆலைகளில், தொழிலாளர்கள் வேலை செய்யாவிட்டாலும் அவர்களைத் தக்கவைக்க தொழிற்சாலை உரிமையாளர்கள் ஊதியம் வழங்கி வருகின்றனர். சில தொழிற்சாலைகள், டீசலை விலைக்கு வாங்கி ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 450 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால், 300-க்கும் குறைவான மெகாவாட் மின்சாரம்தான் வருகிறது. மின்உற்பத்தி திறன் குறைவாக உள்ளதால், இந்த மின்தடை நீடிக்கிறது. மின் உற்பத்தி சரியாகும் வரை இந்த மின்தடை நீடிக்கும் என்றனர்
கடனை அடைக்க முடியவில்லை
தமிழ்நாடு சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க முன்னாள் தலைவர் தங்கராஜ் கூறுகையில், பஞ்சாலைகள் மூலம் தினசரி ரூ.100 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் 10 கோடி ரூபாயும், மற்ற தொழில் நிறுவனங்களில் 20 கோடி ரூபாய் வரையும் திண்டுக்கல் மாவட்டத்தில் தினசரி வர்த்தகம் நடக்கிறது. தற்போது மின்தடையால், வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாமல் வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT