Published : 12 Feb 2014 06:20 PM
Last Updated : 12 Feb 2014 06:20 PM
பராமரிப்பு குறைபாடு காரணமாக அரசுப் பேருந்துகள் அதிக புகை கக்கிச் செல்லும் வாகனங்களாக மாறியுள்ளன. நவீன பேருந்துகளுக்கு தகுந்தாற் போல் உதிரிப்பாகங்கள் பொருத்தப்படாமல் மலிவான விலையில் தரம் குறைந்த உதிரிப்பாகங்கள் பயன்படுத்துவதால் புகை அதிகம் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், கோவை மண்டலத்தில் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வருவாயில் கோவை மண்டலம் 2-ம் இடத்தில் உள்ளது. ஆனால், பராமரிப்பு குறைபாடு காரணமாக இம் மண்டலத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் புகையை அதிகம் வெளியேற்றி வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பி2, பி3 வகைகளைச் சேர்ந்த நவீன பேருந்துகள் அதிகம் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. பழைய பேருந்துகளைக் காட்டிலும் குறைவான புகையை இப் பேருந்துகள் வெளியேற்றும்.
தொடக்கத்தில் சரியாகச் சென்று கொண்டிருந்த இப் பேருந்துகள் தற்போது மாநகரம் முழுவதும் புகையைக் கக்கிச் செல்கின்றன. இப் பேருந்துகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகமான கரும்புகையால் சாலையே புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
என்ன நோக்கத்திற்காக இப் பேருந்துகள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் அதிக மாசுபாட்டைச் சந்தித்து வருவதோடு, பொதுமக்கள் புகையை சுவாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். தனியார் வாகனங்களைப் போன்று, அரசுப் பேருந்துகளுக்கு புகை பரிசோதனை முறையாக செய்யப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.வி.பத்மநாபன் கூறியது:
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிக்கனம் என்ற பெயரில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளுக்கு மலிவான தரமற்ற உதிரிப்பாகங்களை பயன்படுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு, தற்போது பி2, பி3 வகை பேருந்துகளுக்கு ஆயில் நாசில் வாங்க ரூ. 1,100 செலவிட வேண்டும். ஆனால், ரூ.100-க்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதேபோன்று, ஆயில், இதர உதிரிப்பாகங்களும் தரமற்று பயன்படுத்தப்படுகின்றன.
புதிய வகை பேருந்துகளில் தரமற்ற உதிரிப்பாகங்கள் பயன்படுத்துவதால் வழக்கத்திற்கும் மாறான புகை வெளியேறுகிறது. அதிக புகை மட்டும் இல்லாமல், எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இவ்வாறாக தரம் குறைந்த உதிரிப்பாகங்களால் புகை மட்டும் ஒரு பிரச்சினையாக இல்லாமல் நடுவழியில் பேருந்துகள் திடீரென நின்றுவிடுகின்றன. இதற்கு
ஓட்டுநர்கள்தான் காரணம் எனக் கூறி போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
குறைந்த தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு அதிக பேருந்துகளை பராமரித்து வருகின்றனர். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பேருந்துகள் சர்வீஸ் செய்யப்படாமல் அப்படியே இயக்கப்படுவதும் பிரச்சினைக்கு காரணம் என்கிறார்.
நடவடிக்கை
இது குறித்து கோவை போக்குவரத்து துணை ஆணையர் பி.முருகானந்தத்திடம் கேட்ட போது, புகை அதிகம் வெளியேற்றும் எந்த வாகனங்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசுப் பேருந்துகள் மீதும் தொடச்சியாக வழக்குப் பதிவு செய்து வருகிறோம். புகை அதிகம் வெளியேற்றும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அந்த பேருந்துகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிக்கனம் என்ற பெயரில் அரசுப் பேருந்துகளை சீரழித்து வருவதை அரசு கவனிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT