Published : 16 Mar 2017 09:41 AM
Last Updated : 16 Mar 2017 09:41 AM
‘ஹரிஜன்’ பத்திரிகை
1932-ல் காந்தியின் உண்ணாவிரதம், பூனா ஒப்பந்தம் போன்றவற்றைத் தொடர்ந்து காந்தியின் கவனம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின்பால் சென்றது. 1933-ல் ‘ஹரிஜன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார். கூடவே, சகோதரப் பத்திரிகைகளாக குஜராத்தியில் ‘ஹரிஜன் பந்து’, இந்தியில் ‘ஹரிஜன் சேவக்’ போன்றவற்றையும் தொடங்கினார். 1933, பிப்ரவரி 11-ல் வெளியான முதல் இதழில் ‘ஹரிஜன்’ இதழை அறிமுகப்படுத்தி காந்தி இப்படி எழுதுகிறார்: ”ஹரிஜன் இதழின் ஆங்கிலப் பதிப்பானது ‘ஹரிஜன் சேவா சங்க’த்தினரால் அந்த சங்கத்தினருக்காக வெளியிடப்படுகிறது. ஆங்கிலம் அறிந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்காக சேவையாற்றுவோர் ஒவ்வொருவரும் சான்றிதழைக் காட்டி இந்த இதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். தான் வாங்கும் பிரதிக்கும் கூடுதலாக சந்தா வழங்கும் வாசகர்களால்தான் இது சாத்தியமாகும்… ‘ஹரிஜன்’ இதழை நீங்கள் கவனமாகப் படிப்பீர்கள் என்றால் அது உங்களை மிக நுட்பமான பணியொன்றுக்குத் தயார்செய்யும். இந்தியா முழுக்க நடைபெறும் தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளைப் பற்றி வார வாரம் உங்களுக்கு இந்த இதழ் தெரிவிக்கும். மற்றவ்வர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் எதிராளிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் இதழ் உங்களுக்குத் தெரிவிக்கும். தீண்டாமை ஒழிப்புத் தொண்டர்களின் பலவீனங்களையும் தவறுகளையும் தெளிவாகச் சுட்டிக்காட்டும். தாங்கிக்கொள்ள முடியாத அடிமைச் சங்கிலியிலிருந்து 4 கோடிக்கும் மேற்பட்ட மனித உயிர்களை விடுவித்து, இந்து மதத்தின் பாவங்களைக் களைந்து அதைத் தூய்மையாக்கும் இந்த இயக்கத்தில் நீங்கள் சக பணியாளராக உங்களை இணைத்துக்கொள்வீர்களா? எதிராளிகள் சிலர் இந்த இதழின் சந்தாதாரராக ஆனாலும் எனக்குக் கவலை இல்லை. நான் நம்பிக்கைவாதி. எதிராளிகளுடன் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இந்த இதழின் பக்கங்களில் இடம்பெறும் எழுத்துக்கள் எந்த அளவுக்குச் சீர்திருத்தப் பணியாளர்களுக்கானவையோ அந்த அளவுக்கு நம் எதிராளிகளுக்குமானவை. ‘ஹரிஜன்’ இதழ் உண்மைக்காக நிற்குமென்றால், சீர்திருத்தவாதிகள் பொறுமையுடன் இருப்பார்களென்றால், நமது இன்றைய எதிராளிகள் நாளைய சீர்திருத்தவாதிகளாக மாறுவார்கள்.”
தீண்டாமை ஒழிப்புதான் ‘ஹரிஜன்’ இதழின் பிரதான நோக்கம் என்றாலும் அரசியல், உடல் நலம், மதஒற்றுமை, இயற்கை விவசாயம் என்று பல்வேறு விஷயங்களையும் இந்த இதழ் தொட்டுப் பேசியது. இந்த இதழில் காந்திதான் நட்சத்திரப் பங்களிப்பாளர் என்றாலும் மற்றோரும் ஏராளமாகப் பங்களிப்பு செய்தார்கள். ஒரு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் என்ற அளவில் கூட காந்தி எழுதியிருக்கிறார். ரயில் பயணங்களின்போதும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘ரயிலில் எழுதியது’ என்று காந்தி குறிப்பிட்டிருப்பார். வலது கை வலித்தால் இடது கையால் காந்தி எழுதுவார்.
‘ஹரிஜன்’ பத்திரிகையின் பிரதான சக்தியாக காந்தி இருந்திருந்தாலும் அவரது எழுத்தையே ஆசிரியர் குழுவினர் பிரசுரிக்க மறுத்த சம்பவமும் நடந்திருக்கிறது. 1947-ல் காந்தி நவகாளி யாத்திரையில் இருந்தபோது அனுப்பிய கட்டுரைதான் அது. அவரது பிரம்மச்சர்ய பரிசோதனை பற்றிய கட்டுரை என்று அனுமானிக்க முடிகிறது. “ஹரிஜன் இதழ் எனக்குச் சொந்தமானது அல்ல என்பதை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த இதழை மிகவும் அக்கறையோடு நடத்தும் உங்களுக்குத்தான் அது உண்மையில் சொந்தமானது என்று நான் கருதுகிறேன். நான் செலுத்தும் அதிகாரம் தார்மிகரீதியிலானது மட்டுமே” என்று அவர்களுக்கு காந்தி எழுதினார். சர்வாதிகாரச் சக்தி இருந்து அப்படி சர்வாதிகாரத்தைச் செலுத்தாதவர் காந்தி!
காந்தி என்றொரு ரீடர்ஸ் எடிட்டர்
எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகள் விஷயத்தில் காந்தி மிகவும் கவனமாக இருந்தார். தானே பிழையாக எழுதினாலும் அதற்கு மன்னிப்பும் கேட்டதுண்டு. 1939, டிசம்பர் 23-ம் தேதியிட்ட ‘ஹரிஜன்’ இதழில் அப்படி ஒரு விஷயத்துக்கு காந்தி மன்னிப்பு கேட்கிறார். ‘Cavil’ என்ற வினைச்சொல்லைத் தான் தவறாகப் பயன்படுத்தியதற்கான மன்னிப்புகோரல் அது. ஆங்கிலம் பேசும் இந்தியர்களுக்கு உள்ள வழக்கமான பிரச்சினை அது என்பதுடன், ஆங்கில அகராதியில் அந்தச் சொல்லில் பொருளைப் பார்க்காமல் எப்போதோ காதில் விழுந்ததைக் கேட்டுக்கொண்டு பயன்படுத்தியிருக்கிறேன் என்று காந்தி எழுதியிருக்கிறார். இந்த வகையில் இந்திய இதழியலில் முன்னோடி ’ரீடர்ஸ் எடிட்டர்’களில் காந்தியும் ஒருவர்.
அறம் சார் இதழியல்
காந்தியைப் பொறுத்தவரை பத்திரிகைகளின் முதன்மையான கடமை மக்கள் பணியாற்றுவதே. “பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் என்ன துன்பம் நேர்ந்தாலும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தேசத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்” என்றார் காந்தி. அன்றைய பத்திரிகைகளைப் பற்றி காந்தி சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இன்றைய ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் மிகவும் பொருந்தும். “செய்தித்தாள்காரர்கள் நடமாடும் கொள்ளை நோய் போல் ஆகிவிட்டார்கள். செய்தித்தாள்களெல்லாம் மக்களுக்கு பைபிள், குரான், கீதை ஆகிய வேதங்களை ஒன்றாக்கியது போல் (வேதவாக்காக) ஆகிவிட்டன. கலவரங்கள் ஏற்படப்போவதாக ஒரு செய்தித்தாள் எழுதவும் டெல்லியில் தடிகள், கத்திகள் போன்றவை விற்றுத்தீர்ந்துவிடுகின்றன. மக்களைத் துணிவுடன் இருப்பதற்குக் கற்றுக்கொடுப்பதே ஒரு பத்திரிகையாளரின் பணி, அவர்களுக்குள் அச்சத்தை விதைப்பதில்லை” என்கிறார் காந்தி.
‘இந்தியன் ஒப்பீனியன்’, ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’ போன்ற பத்திரிகைகள் மட்டுமல்லாமல் 1919-ல் ‘சத்தியாகிரகா’ என்ற பதிவுசெய்யப்படாத பத்திரிகையையும் காந்தி நடத்தியிருக்கிறார்.
காந்தியின் வரலாறும் அவரது இதழியல் வரலாறும் அந்தக் காலத்தில் இந்திய வரலாறும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. மக்களின் இதயத்தை நோக்கிப் பேசவேண்டும் என்ற எண்ணம் கொண்ட காந்தி தனது கட்டுரைகள் அனைத்தையும் அலங்காரம் தவித்த எளிய மொழியிலேயே எழுதினார். மிகக் குறைவான விலையையே தனது பத்திரிகைகளுக்கு நிர்ணயித்தார். விளம்பரங்களைப் புறக்கணிக்கும் தைரியமும் காந்தி என்ற பத்திரிகை அதிபருக்கு இருந்தது. அவரது எல்லாச் செயல்பாடுகளுக்கும் மையமான ‘அறம்’ என்ற கருத்தாக்கமே அவரது பத்திரிகைச் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்கியது. மேலும் காந்தி என்ற பத்திரிகையாளரைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் எஸ்.என் பட்டாச்சார்யா எழுதிய ‘மகாத்மா காந்தி-த ஜர்னலிஸ்ட்’ ( MAHATMA GANDHI - THE JOURNALIST: S. N. Bhattacharya; National Gandhi Museum & Manak Publications Pvt. Ltd., New Delhi) என்ற புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம். காந்தியின் பத்திரிகைகள் யாவும் ஆவணப்படுத்தப்பட்டு இணையத்திலும் கிடைக்கின்றன. ’காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல்’ என்ற இணையதளத்தில் ( >https://www.gandhiheritageportal.org/journals-by-gandhiji) இந்தப் பத்திரிகைகளைக் காணலாம்.
-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(நாளை…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT