Published : 13 Jan 2014 08:30 PM
Last Updated : 13 Jan 2014 08:30 PM

நாகர்கோவில்: சுங்கான்கடையில் 365 நாளும் மண்பானை தயாரிப்பு

தமிழருடன் வாழ்நாள் முழுவதும் பிரிக்க முடியாத அம்சமாக இருந்த மண் பானைகள் இன்று, தமிழர் கலாச்சாரத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில், குமரி மாவட்ட கிராமத்தில் ஆண்டு முழுவதும் மண் பானை செய்வதை முழு நேரத் தொழிலாக மண்பாண்டக் கலைஞர்கள் செய்து வருகின்றனர்.

தொலைந்த பானை

கடந்த காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில்தான் சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போனது. இன்று, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடச் செல்பவர்கள் ‘பாட்’ பிரியாணி ப்ளீஸ்..‘பாட்’ ரைஸ் ப்ளீஸ் என, நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டு ‘ருசி’த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை வரும் பொங்கல் பண்டிகையில் மண் பானையில் பொங்கலிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, மண் பாண்டக் கலைஞர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறது.

திசை எங்கும் பானை

தமிழகத்தில் மண் பானைகள் மட்டுமே தயாரிக்க குமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் இருப்பது பலருக்கும் தெரியாது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் அடுத்த சுங்கான்கடை தான் அந்த பாரம்பரியத்துக்குரிய கிராமம். இங்கு திரும்பிய திசையெல்லாம் மண் பானை தயாரிப்புதான். இது பொங்கல் பண்டிகைக்கான தயாரிப்பு மட்டும் அல்ல. ஆண்டு முழுவதும் மண் பானை தயாரிப்புதான். கன்னியாகுமரி மாவட்ட மண் பாண்டத் தொழிலாளர்கள் சங்க செயலாளரும், உள்ளூர்க்கார ருமான விஸ்வம் கூறியதாவது:

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தாழக்குடி, தலக்குளம், தேரேகால்புதூர் என ஏகப்பட்ட கிராமங்களில் மண் பாண்டத் தொழிலாளர்கள் நிறைய பேரு இருந்தனர். இதில், அதிகம் பேர் மண் பாண்டத் தொழிலில் கட்டுப்படியான விலை கிடைக்காததால், மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். இருந்தாலும், இப்பவும் எங்கள் கிராம மக்கள் இதை விடாப்பிடியா தயாரிக்கிறோம்.

பொங்கல் நேரம் என்பதால், பானைகளுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு, அதிக பட்ச விலை கிடைக்கிறது. ஒரு கிலோ பொங்கல் பானை 80 ரூபாயும், 2 கிலோ பொங்கல் பானை 125 ரூபாயும், இரண்டரை கிலோ பானை 150 ரூபாயும், 3 கிலோ பானை 200 ரூபாயும் விலை போகிறது.

கேரளத்துக்கு பயணம்

இங்குள்ள பொன்மலை திருமலை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில், 155 பேர் உறுப்பினராக உள்ளனர். கூட்டுறவு சங்கம் மூலம் மாதம் 50 லோடு பானைகளை தமிழகம், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். கேரளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுக்கால் அம்மன் கோவில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படும். அதுக்கும் இப்பகுதியில் இருந்து தான் பானை தயார் ஆகிப்போகும். இதனால், சுங்கான்கடை கிராம மக்களுக்கு ஆண்டு முழுவதும் பொங்கல்தான் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x