Published : 26 Dec 2013 06:07 PM
Last Updated : 26 Dec 2013 06:07 PM
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தைப் பரிசோதிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நடத்தப்படும் இப்போட்டிகளுக்கு கிராம மக்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தை 1-ம் தேதி தொடங்குகிறது. எனவே தங்களது கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கிராம மக்கள் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாதத்திற்கு முன்பே ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால் தற்போதே அதற்கான விண்ணப்பங்களை கிராம மக்கள் அளித்து வருகின்றனர்.
அதேபோல் அரசிதழில் இல்லாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தடை உள்ளதால், உயர் நீதிமன்றங்களில் மனு செய்து அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
எப்போது, எங்கு ஜல்லிக்கட்டு
சில ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, கடும் கட்டுப்பாடு மற்றும் டெபாசிட் காரணமாக 2009-க்குப் பிறகு மிகவும் குறைந்து விட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனவரி 14-ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், 15-ம் தேதி மதுரை மாவட்டம் பாலமேடு, திருச்சி மாவட்டம் சூரியூர் ஆகிய இடங்களிலும், 16-ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சி ஆவாரங்காடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இதுதவிர மதுரை மாவட்டத்தில் சக்குடி, தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர், ஆலத்தூர், திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளமநாயக்கன்பட்டி, தவசிமடை, கொசுவப்பட்டி, சொரிப்பாறைப்பட்டி, வெள்ளேடு, மறவப்பட்டி, வீரசின்னம்பட்டி, புகையிலைப்பட்டி, திருச்சி மாவட்டம் கருங்குளம் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விழாக் கமிட்டியினர் ஆலோசித்து வருகின்றனர்.
காளைகளுக்குப் பயிற்சி
சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஜல்லிக்கட்டு காளைகளை மீண்டும் தயார்படுத்தும் பணியில் அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காளைகளுக்கு உடல் இளைக்க தினமும் சுமார் 4 கி.மீ. தூரம் நடைபயணம், மூச்சுத் திறனை அதிகரிக்க ஆறு, குளம், வாய்க்கால் போன்றவற்றில் நீச்சல், தன்னை கட்டித் தழுவுபவரைத் தூக்கி எறிய பாய்ச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மைதானங்களில் காளைகளை அடக்கும்போது காயம் ஏற்படாமல் இருக்க காளையர்களும் சிறப்புப் பயிற்சி பெறத் தொடங்கி விட்டனர். இதற்காக மார்கழி மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டு பயிற்சி நடத்தப்படுவது வழக்கம்.
டெபாசிட்டுக்கு பதில் இன்சூரன்ஸ்?
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலத் தலைவர் அம்பலத்தரசு கூறுகையில், “ஜல்லிக்கட்டு நடத்த ரூ.2 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் டெபாசிட் தொகையைச் செலுத்த கிராம மக்களால் இயலாது. எனவே அதற்குப் பதிலாக ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.
அடிமாட்டுக்குச் செல்லும் காளைகள்
தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலச் செயலாளர் ஒண்டிராஜ் கூறுகையில், “ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய ஒவ்வொரு காளையையும் முன், பின், பக்கவாட்டு பகுதி என 5 கோணங்களில் படமெடுத்து, ரூ.500-க்கான டிடி செலுத்தி விண்ணப்பிப்பதில் கடும் சிரமம் உள்ளது. இதனால் பெரும்பாலான காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்க முடியாமல் போவதால், அவற்றின் உரிமையாளர்கள் விரக்தியடைந்து அடிமாட்டுக்கு காளைகளை விற்று வருகின்றனர். இந்த வேதனை தொடராமல் இருக்க ஜல்லிக்கட்டுக்கான கடும் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்” என்றார்.
தயாராகிறது இரட்டைமலை காளை
இதுவரை எந்த ஒரு களத்திலும் பிடிபடாத, திருச்சி இரட்டைமலை ஒண்டிகருப்பணசாமி கோயில் காளை இந்தாண்டு ஐல்லிக்கட்டில் வீரர்களை விரட்டத் தயாராகி வருகிறது. இந்தக் காளைக்கு சாமியின் பெயரான ஒண்டிகருப்பு என பெயரிட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்ட களங்களை கண்டுள்ள இந்தக் காளை எந்த ஒரு இடத்திலும் பிடிபட்டது கிடையாது. ஜல்லிக்கட்டு நடத்துவோர் நேரில் வந்து வெற்றிலை, பாக்கு வைத்து முறையாக அழைத்தால் சாமியிடம் உத்தரவு கேட்டுவிட்டு இக்காளையை ஜல்லிக்கட்டுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களே உள்ளதால் காளைக்கு தினமும் 1 மணி நேரம் மலையேற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். பருத்தி, தேங்காய்ப் புண்ணாக்கு, உலர்ந்த காய்கறிகள், ஊற வைத்து முளை கட்டிய பயறு வகைகள் என சத்தான உணவுகளை நாள்தோறும் அதற்கு வழங்கித் தயார்படுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT