Last Updated : 07 Dec, 2013 12:00 AM

 

Published : 07 Dec 2013 12:00 AM
Last Updated : 07 Dec 2013 12:00 AM

வேலையிழக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள்: மணல் தட்டுப்பாடு காரணமா?

தாஜ்மஹாலைக் கட்டியது யார்? ஷாஜஹான் என்று கூறினால் நகைச்சுவையாகக் கொத்தனார் என்று பலரும் கூறக் கேட்டிருப்பீர்கள். இது நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அதுதான் உண்மை. இன்று வானளவு உயர்ந்திருக்கும் கான்கிரீட் கட்டடங்களை நிர்மாணித்தவர்கள் பொறியாளர்களாக இருந்தாலும், அதைக் கட்டமைத்தவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள்தான். சொந்த ஊரிலே தொழிலுக்குச் சென்ற இவர்கள், இன்று வேலை தேடி வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் என வேலைக்கு ஏற்ப பல திருநாமங்களில் அழைக்கப்படும் இவர்களுக்கு ஒரே இடத்தில் வேலை என்பது நிரந்தரமல்ல. எங்கு வேலை கிடைக்கிறதோ அங்குச் சென்று பிழைப்பு நடத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு எல்லாக் காலத்திலும் உண்டு. ஆனால் சொந்த ஊரிலேயே வேலைக்குச் சென்று வந்த இவர்களுக்குத் தற்போது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. மணல் தட்டுப்பாடு, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், ரியல் எஸ்டேட் தொழில் மந்தம் காரணமாகத் தற்போது சரிவர வேலை கிடைக்காமல் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விளைவு..? வேலையிழப்பு.

சென்னையில் மட்டும் இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் கட்டப்பட்ட 48 ஆயிரம் வீடுகள் விற்கப்படவில்லை என்கிறது ரியல் எஸ்டேட் அமைப்பான கிரெடாய். சென்னையில் மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும்கூட மந்த நிலையில் உள்ளது கட்டுமானத் தொழில். கட்டப்பட்ட வீடுகள் இப்படி விற்காமல் இருப்பதால் அடுத்தடுத்த வீடு கட்டும் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் திணறி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் மணல் தட்டுப்பாடு, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் கட்டுமானத் துறையை அசைத்துப் பார்த்துள்ளது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தொய்வு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூரில் வேலை கிடைக்காத காரணத்தால் வெளியூருக்கு வேலைத் தேடிச் செல்வதாகக் கூறுகின்றனர் கட்டுமானத் தொழிலாளர்கள்.

‘‘சின்னச் சின்ன காண்ட்ராக்ட் எடுத்துச் செய்து வந்தோம். கடந்த இரு மாதங்களாகவே திருச்சியில் சின்ன காண்ட்ராக்ட் எதுவும் கிடைக்கவில்லை. கொத்தனார் வேலைக்குப் போகலாம்னு பார்த்தாலும் வேலை கிடைக்கவில்லை. ஒரு மாதமா வேலைத் தேடிப் போறது; வீட்டுக்கு வர்றதாவே இருந்தோம். பின்னர் நண்பர் மூலமாகச் சென்னையில் கொத்தனார் வேலை கிடைச்சது. இப்போது ஒரு மாதமாகச் சென்னையில் தங்கி வேலைச் செய்து வருகிறோம். தினக்கூலியாக ரூ.550 கிடைக்குது. ஆனால், இதில் தினமும் ரூ.150 -200 செலவு செய்தால்தான் ஓரளவுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. வாங்குற கூலி சாப்பாட்டுக்கே சரியா போகுது’’ என்கின்றனர் திருச்சியில் இருந்து சென்னை வந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜகோபாலும் மூர்த்தியும்.

நிலைமை இப்படி இருக்க சென்னையில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கே வேலை கொடுக்க முடியாமல் திண்டாடுவதாகக் கூறுகின்றன கட்டுமான நிறுவனங்கள். பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டும் பணிகளை நிறுத்தி 3 வாரங்கள் ஆகிவிட்டன என்கிறார் சென்னை புறநகர் கட்டுநர் சங்கச் செயலாளர் பிரிட்டோ பிரான்சிஸ். ‘‘இப்போது முக்கிய பிரச்னையே மணல் தட்டுப்பாடுதான். மணல் கிடைக்காத காரணத்தால் வேலைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மேஸ்திரிகளுக்கே வேலை இல்லாதபோது, அவர்கள் மூலம் அழைத்து வரப்படும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்’’ என்கிறார் இவர்.

நிலைமை இன்னும் மோசமாவதற்குள், கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x