Published : 31 Jan 2014 05:10 PM
Last Updated : 31 Jan 2014 05:10 PM

தீயணைப்பு நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு

தமிழகத்தில் வறட்சியால் தீயை அணைக்க தண்ணீர் கிடைக்காமல், தீயணைப்பு வீரர்கள் அவசர விபத்து காலத்தில் லாரியுடன் தண்ணீரைத் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த கோடை காலத்தில் அவசர தீவிபத்து காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தீவிபத்துகளை தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

6700 தீயணைப்பு வீரர்கள்

தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 302 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒகேனக்கல், கோத்தகிரி ஆகிய இடங்களில் 2 மீட்பு நிலையங்கள் உள்ளன. இந்த தீயணைப்பு நிலையங்கள், மீட்பு நிலையங்களில் மொத்தம் 6,700 தீயணைப்பு வீரர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள், தீ விபத்துகள் மட்டுமின்றி, சாலை விபத்து, மீட்புப் பணி மற்றும் இயற்கைப் பேரழிவு அவசர காலங்களில் மீட்பு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

குடிநீர் கிடைக்காமல் அவதி

தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பருவமழைகள் முற்றிலும் பொய்த்து கடும் வறட்சி நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே மழை இல்லாததால் ஆறுகள், ஏரிகள், குளங்கள், விவசாயக் கிணறுகள் வறண்டுவிட்டன. விவசாயிகள் நீர்ப்பாசனம் செய்ய முடியாமலும், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமலும் சிரமம் அடைந்துள்ளனர்.

தற்போது பொதுமக்கள், விவசாயிகளை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களும் தண்ணீர் கிடைக்காமல் தீ விபத்து காலத்தில் லாரியுடன் தண்ணீரை தேடி குளங்கள், ஏரிகள், விவசாயத் தோட்டங்களுக்கு அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், பெரிய விபத்துகளில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுக்கு 30 ஆயிரம் சிறிய விபத்துகள், 600 நடுத்தர தீவிபத்துகள், 250 பெரிய தீ விபத்துகள் ஏற்படுகின்றன. தீ விபத்து காலங்களில் தீ அணைக்க தண்ணீர் முக்கிய அடிப்படை தேவையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கு கீழ் சென்றதால் தீயணைப்பு நிலைய ஆள்துளை கிணறுகள் வறண்டு விட்டன.

அதனால், கிணறுகள், விவசாய கால்வாய்களில் லாரிகளில் தண்ணீர் எடுக்கிறோம். தீயணைப்பு லாரிகளில் அதிகப்பட்சம் 4,500 லிட்டர் முதல் 9,000 லிட்டர் தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். சிறிய விபத்துகள் ஏற்படும்போது, இந்த தண்ணீரை வைத்து சமாளித்து விடலாம். பெரிய தீவிபத்து ஏற்பட்டால் தண்ணீருக்காக ஒவ்வொருரையும் கெஞ்ச வேண்டிய உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளது. இனி தண்ணீருக்கு முன்பை விட தட்டுப்பாடு அதிகரிக்கும். தீ விபத்துகளும் அதிகளவு நடக்கும். ஆனால், தீயணைப்பு நிலைகளின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் எந்த தொலைநோக்கு திட்டத்தையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

திண்டுக்கல் தீயணைப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எங்குமே தண்ணீர் இல்லை. நகராட்சி தண்ணீரை மட்டுமே நம்பியே உள்ளோம். பாதுகாப்புக் கவசங்கள் போதியளவு உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x