Published : 30 Dec 2013 07:23 PM
Last Updated : 30 Dec 2013 07:23 PM
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ப.வேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெல்லம் தயாரிப்புப் பணிகள் மும்முரமாகியுள்ளன. அதிக உற்பத்தியால் வெல்லம் விலை சரிந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
ப.வேலூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தி ஜேடர் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், அச்சு மற்றும் உருண்டை ரக வெல்லம் தயார் செய்யப்பட்டு, பிலிக்கல் பாளையத்தில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் நடக்கும் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வெல்லத்திற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காவிரி ஆற்றுப்படுகையில் விளையும் கரும்பு மூலம் வெல்லம் தயார் செய்யப்படுவதால், இப்பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லம் சுவை மிகுந்து காணப்படும். எனவே, ப.வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தயாராகும் வெல்லத்தை, வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனால், பில்லிக்கல்பாளையம் சந்தைக்கு வெல்லம் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக வெல்லம் விலை சரியத் துவங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்க முன்பு வரை ரூ.1,700-க்கு விற்பனையான 30 கிலோ எடை அச்சு வெல்லம், தற்போது ரூ.300 குறைந்து ரூ.1,400-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ரூ.1,400 வரை விற்பனையாகி வந்த உருண்டை வெல்லம், ரூ.200 சரிந்து ரூ.1,200 வரை விற்பனையாகிறது. விலை சரிவால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து வெல்ல உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம், 30 கிலோ மூட்டைகளாக கட்டப்படுகிறது. வாரச் சந்தைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதால், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பிலிக்கல்பாளையம் சந்தைக்கு வெல்லம் கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை சரிந்துள்ளது. முதல் ரக அச்சு வெல்லம் ரூ.1,400 வரையும், இரண்டாம் ரகம் ரூ.1,300 வரையும், மூன்றாம் ரகம் ரூ1,200 வரையும் விற்பனையாகிறது. மேலும், ரூ.1,400-க்கு விற்பனையாகி வந்த உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.
இந்த விலை உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்டாது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை சமயத்தில் விலை குறைந்து விடுகிறது. வெளி மாவட்ட வரத்து குறைந்தால்தான், ப.வேலூர் வெல்லத்துக்கு நல்ல விலை கிடைக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT