Published : 21 Jan 2014 08:06 PM
Last Updated : 21 Jan 2014 08:06 PM
குஷி வந்துவிட்டால் ‘அலேக்’ தூக்கு; வெளியில் வர மனமில்லாத ஆற்றுக்குளியல் என்று சுகமாக பொழுதைக் கழிக்கின்றன கோயில் யானைகள்.
கோயில் யானைகள் மற்றும் வனத்துறை வளர்ப்பு யானைகள் நலவாழ்வு புத்துணர்ச்சி முகாம் துவங்கி 33 நாட்கள் ஓடிவிட்டன. புத்துணர்ச்சி முகாம் முடிய, இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், முகாமில் யானைகளையொட்டி நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
கோயில் யானைகளை பவானி ஆற்றில் குளிக்க விட்டால், ஆற்றை விட்டு வெளியே வர மறுத்து, அடம்பிடிப்பது வழக்கமாக உள்ளது. அதில், முக்கியமான யானை குன்றக்குடி சுப்புலட்சுமி.
‘இது ஆற்றில் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில்தான் குளியல் போடுகிறது. ஆற்றை விட்டு கிளப்பினால் கோபம் கொள்கிறது. கோயிலில் இருக்கும் வரை நான்கைந்து வாளி தண்ணீரால்தான் குளிப்பாட்டுவோம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஆழ்குழாய் கிணற்று நீரை அப்படியே, குழாயில் மோட்டார் போட்டு அடித்துவிடுவோம். அதற்கே படுத்துக்கொண்டு எழுந்து வராது. அப்படிப்பட்ட சுப்புலட்சுமி, ஆற்றைக்கண்டால் விடுவாளா? ஒவ்வொரு முறையும் ஆற்றில் இறக்கி குளியல் முடித்தபின்பும், வாடியம்மா வா… நாளைக்கு குளிச்சுக்கலாம் வா… போதும் வா...ன்னு கெஞ்ச வேண்டியிருக்கு’ என்கிறார் இதன் பாகன்.
இதேபோல் தான் அகிலா என்ற யானையும். ஆற்றுநீரைக் கண்டால், அது குளித்து எழுவதற்குள் இதன் பாகனுக்கு போதும், போதும் என்றாகி விடுகிறதாம்.
தாம்பரம், சோலையூர், அகோபில மடத்து மலோலனும், குளியலின் போது அதை விட்டு மனம் வராதவன்தான். ஆனால், இவன் சேட்டை கொஞ்சம் ஓவர். குளித்துவிட்டு தந்தங்களை சுத்தம் செய்யும்போது, திடீர் மூடு வந்து பாகனை அப்படியே இரண்டு கொம்பிலும் தூக்கி விடுகிறான். அந்தரத்தில் தொங்கிக் கொண்டே தந்தங்களை சுத்தம் செய்ய வேண்டும் பாகன். அப்படி பாகன் செய்யாதபட்சத்தில், அப்படி ஓர் ஆட்டு; இப்படி ஓர் ஆட்டு தூரி விளையாட வைத்துவிடுகிறான் மலோலன். சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொம்பில் தொங்கிக்கொண்டே விளையாட வேண்டும் என்கிறார் இதன் பாகன் குரு.
பின்வாசலில்…
கோயில் யானைகளை, பார்வையாளர்கள் காண தினமும் 2 மணி நேரம் முன்வாயில் வழியே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் 100 மீட்டர் தூரத்தில் நிற்கும் யானைகளை பார்வையாளர்கள், ஒரு மேட்டின் மீது நின்று பார்க்க மட்டுமே அனுமதி. ஆனால், அதையெல்லாம் தாண்டி பின்புறம் வழியே சில கிராம மக்கள், கோயில் யானைகளை பகல் பொழுது முழுவதும் பார்க்கின்றனர்.
கோயில் யானைகள் முகாம் நடக்கும் பவானி நதிக்கரையின் மேற்குப் பகுதியில் நெல்லித்துறை, வேப்பமரத்தூர் என சில கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்து மக்கள் குறிப்பாக, பள்ளிச் சிறுவர்கள், பவானி ஆற்றில் நீர் குறைவாக ஓடுவதால் ஆற்றைக்கடந்து கோயில் யானைகள் முகாமிற்குள் நுழைந்து விடுகின்றனர். பவானியில் குளிக்கும் யானைகளை அருகில் இருந்தே தரிசிக்கின்றனர். கோயில் யானைகள், எந்த நேரத்தில் மூர்க்கம் கொள்ளும்; எந்த நேரத்தில் யாரைக்கண்டு மிரளும் என்பது தெரியாது.
எனவேதான், பார்வையாளர்களை கவனமாக அனுமதிக்கின்றனர் முகாம் பொறுப்பாளர்கள். ஆனால், இப்படி பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் பாகன்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT