Published : 04 Jan 2015 11:44 AM
Last Updated : 04 Jan 2015 11:44 AM

அன்பு வாசக நெஞ்சங்களே!

புத்தாண்டு வாழ்த்தும் வணக்கங்களும்...

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழகத்தின் 13 நகரங்கள் மற்றும் புதுவையில் வாசகர் திருவிழா நடத்தி முடித்த பிரமிப்புடனும் நன்றியுடனும் இங்கே மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

‘நாம் எல்லோரும் ஒரு குடும்பம்’ என்ற உணர்வோடு நகரங்கள் தொடங்கி குக்கிராமங்களில் இருந்தெல்லாம் வாசகர் திருவிழாவுக்கு சிரமம் பாராமல் நேரில் வந்து கலந்துகொண்டீர்கள். உங்களில் பலரும் நிகழ்த்திய உரைகள், நாங்கள் எத்தனை ஆழ்ந்த அறிவும் சமூக அக்கறையும் கொண்ட வாசகர்களைப் பெற்றிருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணரச் செய்தது.

உணர்வுபூர்வமாகவும் ஆழ்ந்த அக்கறையுடனும் அந்த விழா மேடையில் நீங்கள் முன்வைத்த விமர்சனங்கள் எங்களை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள பேருதவியாக இருக்கும். அது மட்டுமா... ஒவ்வொரு விழா அரங்கிலும் உங்களிடம் அளிக்கப்பட்ட படிவத்தை பொறுமையாகப் பூர்த்தி செய்து, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் பளிச்சென பதிவு செய்திருக்கிறீர்கள் நீங்கள்.

உங்களின் இந்த பங்கேற்பும் வரவேற்பும் நம்பிக்கை வார்த்தைகளும் எங்களின் நெகிழ்ச்சியான நன்றிக்கு உரித்தாகிறது. மேலும் சிறப்பாக கடமையைச் செய்ய யானை பலம் சேர்க்கிறது.

துவங்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே ஒரு நாளிதழ் எந்த அளவுக்கு வாசகர்கள் மனதில் வேரூன்ற முடியும் என்பதற்கு ஆச்சரியமான உதாரணம்தான் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். இந்தப் பெருமை உங்களால்தான் சாத்தியம் ஆனது. உங்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய கருத்துகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில், நீங்கள் தவிர்க்கச் சொன்னவை...

* இளைய சமுதாயத்தின் மனதைப் பாதிக்கும் பாலியல் வன்முறை செய்திகள் தேவையில்லை.

* வன்முறை எண்ணத்தையோ, எதிர்மறை சிந்தனையையோ தூண்டும் குற்றங்கள் குறித்து விரிவாக செய்தி வெளியிடவேண்டாம்.

* லெட்டர் பேடு அமைப்புகளின் விளம்பர நோக்கச் செய்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது.

* தற்போது தென்படும் ஒருசில எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகளை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.

* கூடுமான வரையில் ஆங்கில சொற்பிரயோகங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது.

அதேபோல்...

* உள்ளூர் செய்திகள், கிராமப்புறச் செய்திகளுக்கு மேலும் முக்கியத்துவம் தரவேண்டும்.

* ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகும் அரிய கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிடவேண்டும்.

* லஞ்ச ஒழிப்பு, விவசாயம், தொழில் வளர்ச்சி, ஆரோக்கியம், புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கவேண்டும்.

* சட்டம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் அதிக அளவில் வெளிவரவேண்டும்.

* உலகச் செய்திகளுக்கு கூடுதலாக இடம் ஒதுக்கலாம்.

* இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் நலன்களை முன்னிறுத்தும் செய்திகள், கட்டுரைகளை அதிகரிக்கவேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடுநிலை என்ற கொள்கையை ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து கடைப்பிடிப்பது குறித்து ‘வாசகர் விழா’க்களில், மேடைக்கு மேடை பெருமிதம் காட்டினீர்கள்.

நீங்கள் எங்களுக்கு அளித்த யோசனையின் பலனாகத்தான் ‘மெல்லத் தமிழன் இனி..?’ தொடர் வெளியாகி, மதுவின் கொடுமை பற்றிய விழிப்பு உணர்வை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. சேமிப்பு - முதலீடு - புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்து பயனடைய தனியே ஒரு இணைப்பிதழ் வேண்டும் என்றீர்கள். அதுதான், திங்கள்தோறும் மலரத் துவங்கியுள்ள ‘வணிக வீதி’ இணைப்பு. இவை ஓரிரு உதாரணங்கள் மட்டுமே..! இப்படி பல்வேறு கோணங்களிலும் உங்கள் தகவல்களைக் கொண்டு எங்களை நாங்கள் மேன்மேலும் சீர்படுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கிவிட்டோம்.

அதேசமயம், எங்கள் குடும்பத்தின் மிக நெருக்கமான உறுப்பினராக - சந்தாதாரர் என்ற பட்டியலில் உங்களை எப்போதும் திருப்தியுடன் நீடித்து இருக்கச்செய்வதற்கு எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றியும் உங்களிடம் கேட்டறிய விரும்புகிறோம். அதற்கென உங்களிடம் வேண்டுவது, இதற்காக ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஒதுக்கவேண்டும் என்பதுதான்.

கீழே இருக்கும் மூன்று கேள்விகளைப் பாருங்கள். அவற்றுக்கு SANDHA 1A அல்லது 1B அல்லது 1C 2A அல்லது 2B அல்லது 2C 3A அல்லது 3B அல்லது 3C என்று டைப் செய்து 8082807690 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.

அல்லது, 1800-3000-1878 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கணினிக் குரலின் வழிகாட்டுதல்படி அந்த மூன்று கேள்விகளுக்கும் உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் வழிகாட்டுதல் எங்களை மேன்மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு பயனோடும் சுவையோடும் செய்திச் சேவை புரிய மேலும் உதவியாக இருக்கும்.

உங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து நாடி நிற்கும்...

கே.அசோகன்,
ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x