Published : 01 Feb 2014 08:58 PM
Last Updated : 01 Feb 2014 08:58 PM
வேலூர் ஓட்டேரி பகுதியில் உள்ள தனியார் ஜல்லி கற்கள் தயாரிக் கும் நிறுவனத்தில் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வேலூர் ஓட்டேரி பகுதியில் உள்ள சாமி நகர், நம்பிராஜபுரம், ஓட்டேரி சாலை, ஆனந்த் நகர் பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் இந்த பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்த பகுதியும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதேநேரம் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காணமுடியவில்லை. வழக்கமாக குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, விளக்கு வசதி இல்லை, கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது, கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை என பல்வேறு காரணங்களை கூறுவார்கள். ஆனால், ஓட்டேரி பகுதி மக்கள் கொஞ்சம் வித்தியாசமான பிரச்சினையை முன்வைக்கின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் நீண்ட காலமாக கருங்கற்களை உடைத்து ஜல்லி கற்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜல்லி தயாரிக்கும் பணி தினமும் நடப்பதால், அதில் இருந்து எழும் புகை அருகில் உள்ள வீடுகளில் தூசுக்களாக படிகிறது. வீடுகளில் மீது படியும் தூசுக்களை சுத்தப்படுத்தவே பெரும்பாடு படுகின்றனர். புதிதாக பெயின்ட் அடித்தாலும் அதன் நிறம் மாறிவிடுகிறது.
குடிநீர் தொட்டிகளை மூடிவைத்தாலும் காற்றில் பறந்துவரும் தூசு காரணமாக தண்ணீரின் நிறம் மாறிவிடுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் காற்றில் பறந்துவரும் தூசுக்களை சுவாசிப்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “நீண்ட காலமாக இயங்கிவரும் இந்த தொழிற் சாலையை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாநகராட்சி பகுதியில் மக்க ளுக்கு கேடு விளைவிக்கும் இந்த ஜல்லி தயாரிக்கும் தொழிற்சாலையை ஊருக்கு வெளியில் நடத்திக்கொள்ளட்டும்.
தொழிற்சாலை நடத்துபவர்கள் நல்லெண்ண அடிப்படையில் தாங்களாகவே முன்வந்து இடத்தை மாற்றினால் நாங்கள் வரவேற்போம். அவர்களுக்கு வேறு இடங்களிலும் ஜல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த இடத்துக்கு இதனை மாற்றிக்கொள்ளலாம்” என்றனர்.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான புகார்களும் வரவில்லை. வழக்கமாக ஜல்லி தயாரிக்கும் நேரத்தில் தண் ணீரை பீய்ச்சி அடிக்கும்போது காற்றில் புழுதி பறக்காது.
இந்த நடைமுறையை ஜல்லி தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் கடைபிடித் திருக்க மாட்டார்கள். புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஜல்லி தயாரிக்கும் தொழிற் சாலையில் ஆய்வு நடத்தப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT