Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

கிளாசிக் பேருந்து: பயணிகளிடம் கருத்துக் கேட்பு- இதர வழித்தடங்களிலும் இயக்கத் திட்டம்

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதன்முறையாக இயக்கப்பட்டு வரும் உணவகம் மற்றும் கழிவறை வசதியுள்ள கிளாசிக் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறது இப்பேருந்துகளை இயக்கிவரும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்.

சாய்வு தள இருக்கை வசதி, உணவு, கழிப்பிட வசதி கொண்ட கிளாசிக் பேருந்தில் பயணம் செய்வதில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருப்பதால் மக்கள் இந்த வகை பேருந்துகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

முதல்கட்டமாக சென்னை - ரங்கம் - சென்னை இடையே இந்த பேருந்துகளின் இயக்கத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி சென்னையில் தொடக்கி வைத்தார். தொடக்கத்தில் சில இன்னல்களைச் சந்தித்த இந்த பேருந்து தற்போது வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

கிளாசிக் பேருந்துகள் இயக்கம் தொடங்கி 7 மாதங்களைத் தொட்டுள்ள நிலையில், இந்த பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும், ஆர்வமும் பயணிகளிடையே அதிகரித்துள்ளது என்கின்றனர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.

சென்னை மற்றும் ரங்கத்திலிருந்து தினந்தோறும் காலை 9 மணிக்கும், இரவில் 10 மணிக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

உணவகம், கழிவறை

இந்த பேருந்தின் கடைசி பகுதியில் கழிவறை மற்றும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் இட்லி, பொங்கல், ஊத்தப்பம், மதிய வேளையில் சாத வகைகள், அம்மா குடிநீர் பாட்டில் ஆகியவை குறைந்த விலையில் பரிமாறப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்வதற்கு வரிசை கட்டி பேருந்துகள் நின்றாலும், கிளாசிக் பேருந்தில் செல்வதற்கு சாதாரண நாளிலேயே பயணிகள் கூட்டம் ஆர்வத்துடன் தினந்தோறும் காத்திருக்கிறது.

இந்த பேருந்தில் மனைவியுடன் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த முகம்மது இர்பான் கூறியது: இந்த பேருந்து பெண்கள், முதியவர்கள் பயணிக்க வசதியாக உள்ளது. புஷ்பேக் வசதியுடன் கூடிய இருக்கைகள், தூய்மையான உட்புறம் என நன்றாக உள்ளது. சிற்றுண்டி கிடைப்பதுடன் விலையும் மலிவாக உள்ளது. இங்கு உதவிக்கு உள்ள பணியாளர் மிகவும் கனிவாகவும் நடந்து கொள்கிறார். கட்டணமும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கட்டணம்தான்” என்றார் மிக மகிழ்ச்சியாக.

கருத்துப் படிவம்

தற்போது, கிளாசிக் பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் இந்த பேருந்தின் இயக்கம், ஓட்டுநர், நடத்துநரின் செயல்பாடு, உபசரிப்பு, வேறு வழிதடங்களிலும் கிளாசிக் பேருந்துகளை இயக்கப்படலாமா ஆகியவை தொடர்பாக பதிவு செய்ய கருத்து படிவத்தை பேருந்தில் உள்ள உதவியாளர் ஒவ்வொரு பயணியிடமும் அளித்து, நிரப்பப்பட்ட படிவத்தை மீண்டும் பெற்றுக் கொள்கிறார்.

இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் கருத்துகளைக் கொண்டு, மேலும், சில தொலைதூர வழித்தடங்களில் கிளாசிக் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள், அதற்கு பயணிகள் மத்தியில் உள்ள ஆர்வம் ஆகியவற்றை அறியவே கருத்து படிவங்கள் பெறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x