Published : 08 Mar 2017 11:00 AM
Last Updated : 08 Mar 2017 11:00 AM
சர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா?
* 1908-ல் நியூயார்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.
* முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் ஃபிப்.28, 1909-ல் கொண்டாடப்பட்டது.
* 1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், தேதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
* இதன் விளைவாக உலக மகளிர் தினம் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
* 1914-ல் முதல் உலகப் போர் மூண்டது. அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள், தங்களின் முதல் பெண்கள் தினத்தை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். போருக்கு எதிராகவோ, ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவோ அதே வருடத்தில் மார்ச் 8 வாக்கில் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர்.
* 1917-ல் மற்றுமொரு புரட்சி தோன்றியது. முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரால் ஏராளமான ரஷ்ய வீரர்கள் செத்து மடிந்தனர். அனைவரும் வாழ வழியின்றிப் பட்டினியால் அவதிப்பட்டனர். பொறுக்கமுடியாமல் ரஷ்யப்பெண்கள் பொங்கி எழுந்தனர். பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தபட்டது. (கிரிகோரியன் காலண்டரில் மார்ச் 8).இதைத்தொடர்ந்து ரஷ்யப் புரட்சி வெடித்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது.
* 1975-ல் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச் 8- ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
நூற்றாண்டுக்கு முன்பே போராளிகளாய் இருந்த பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது?
மகப்பேறு விடுமுறை
உலகம் முழுவதும் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறைக்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை (14 வார சம்பளத்தோடு கூடிய விடுமுறை) அளிக்கின்றன. 28% பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறையை அனுபவிக்கின்றனர்.
ஊதியமில்லாப் பணி
ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்தபட்சம் இரண்டரை மடங்காவது அதிகமாகச் செய்கின்றனர்.
சம்பள பாகுபாடு
ஒரே மாதிரியான வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒருகுறிப்பிட்ட வேலைக்கு ஆணுக்கு 100 சென்ட் ஊதியம் அளிக்கப்பட்டால், பெண்ணுக்கு 77 சென்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் 66% பணியைப் பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகின்றனர்.
பணிபுரியும் வயது விகிதம்
சராசரி பணிபுரியும் வயது விகிதம் ஆண்களுக்கு 76.1 ஆகவும், பெண்களுக்கு 49.6 ஆகவும் இருக்கிறது.
வேலையில்லாதவர் விகிதம்
சர்வதேச அளவில் 12.5% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது இளைஞிகளுக்கு 13.9% ஆக இருக்கிறது.
சர்வதேச அளவில் பணியில் பெண்கள்
61.5% பெண்கள் சேவைத்துறைகளில் பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விகிதம் 13.5. விவசாயத்தில் 25% பெண்கள் ஈடுபடுகின்றனர்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 23%
பெண் சிஈஓக்கள், தலைமை அதிகாரிகள் வெறும் 4% மட்டுமே இருக்கின்றனர்.
முறைசாரா வேலைவாய்ப்பு
முறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் (வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வேலை கிடைக்கும்போது செய்பவர்கள்) தெற்காசியாவில் 95% பெண்கள் பணிபுரிகின்றனர்.
புலம்பெயர் பெண்கள்
புலம்பெயர்ந்த பெண்களில், வீட்டுவேலை செய்யும் 57% பெண்களுக்கு வேலை நேரத்துக்கு எந்தவித உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படுவதில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறை
ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பெண்களில் 55% பேர், தங்களுடைய 15 வயதில் இருந்து ஒரு முறையாவது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதில் 32% பெண்கள் தங்களின் பணியிடங்களில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகின்றனர்.
சட்டபூர்வ தடைகள்
பாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. 18 நாடுகளில், மனைவி பணிபுரிவதைக் கணவன் சட்டபூர்வமாக எதிர்க்க முடியும்.
சமூக பாதுகாப்பு
பணி ஓய்வு பெற்ற பிறகு, முறையான ஓய்வூதியத்தொகையை 65% ஆண்கள் பெறுகின்றனர். பெண்களைப் பொருத்தவரையில் 35% பேருக்கே முறையான ஓய்வூதியம் கிடைக்கிறது.
பெண்களின் முன்னேற்றத்தில் ஐ.நா.
பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபை, 2030-க்குள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கென சில திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி,
* 2030-ம் ஆண்டில், அனைத்து சிறுமிகளும் முழுவதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
* தரமான மற்றும் சமத்துவக் கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். பயனுள்ள கற்றலை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
* உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
* சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகளை ஒழிக்க வேண்டும்.
* குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணம், பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை அகற்ற வேண்டும்.
இவை அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில் பெண்களின் நிலை இன்னும் பல படிகள் உயரும். வாழ்வு செழிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT