Published : 03 Jan 2017 11:04 AM
Last Updated : 03 Jan 2017 11:04 AM
கிருஷ்ணகிரி நகராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என ‘தி இந்து’ - உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இமையவரமன் மற்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சியின் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டது. கடந்த செப்டம்பர் மாதம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அன்றைய தினம் திறப்பு விழா நடைபெறாமல், பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பல்வேறு சான்றிதழ்கள் பெற வரும் மக்கள், தங்களது குறை சார்ந்த அதிகாரியிடம் தகவல்களைப் பெற அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை திறக்க தமிழக முதல்வருக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி அலுவலக கட்டிடம் மட்டுமின்றி, புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட 72 கட்டிடங்களை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திறக்கப்படாத கட்டிடங்களால் மக்கள் அவதியுற்று வருவதாக, புகாரும் அளித்துள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாளவாடி தாலுகாவில் வங்கிக் கிளைகளை தொடங்க வலியுறுத்தல்
தாளவாடி தாலுகாவில் கூடுதல் வங்கிக் கிளைகளையும், ஏடிஎம் மையங்களையும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் தாளவாடி தாலுகா உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தாளவாடி பகுதியில் கூடுதலாக வங்கிக் கிளைகள் தொடங்க வேண்டுமென ‘தி இந்து-உங்கள் குரல்’ பகுதியில் தொடர்பு கொண்ட வாசகர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
தாளவாடியில் இரு வங்கிக் கிளைகளும், மூன்று ஏடிஎம் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்பு காரணமாக, கடந்த ஒரு மாதமாக இந்த வங்கிக் கிளைகளில் நாள் முழுவதும் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச தொகையைக் கூட எடுக்க முடியவில்லை. அரசு ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் என பலரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாளவாடி பகுதியில் மேலும் இரு வங்கிக் கிளைகளை அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் உடனடியாக ஏடிஎம் மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரிடம் பேசியபோது, ‘தேவைக்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக் காத நிலையில், வங்கிகளுக்கு ரேஷன் முறையிலேயே தொகை வழங்க வேண்டியுள்ளது. தாளவாடி மலைப்பகுதி என்பதால், மற்ற இடங்களைக் காட்டிலும் அங்கு கூடுதலாக ரூபாய் நோட்டுக்களை வழங்கி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அங்கு நிலைமை சீரடையும்.
தாளவாடியில் ஒரு தனியார் வங்கி, ஒரு பொதுத் துறை வங்கி கிளைகளும், அதன் சுற்றுப்பகுதியில் ஆறு வங்கிக் கிளைகளும் செயல்படும் நிலையில், புதிய வங்கிக்கிளை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. பர்கூரில் புதிய வங்கிக் கிளை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது’ என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT