Last Updated : 04 Mar, 2014 12:00 AM

 

Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

பேருந்து நிலையமா? திறந்தவெளி மதுக்கூடமா?- புனிதத் தலமான வேளாங்கண்ணியில் வேதனை

பேருந்து நிலையத்தின் உள்ளே அவசரத் தேவைக்காக உயிரைக் காக்கும் மருந்துக் கடைகள் இருக்கிறதோ இல்லையோ இப்போதெல்லாம் கட்டாயமாக உயிரைப் பறிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கின்றன. புனிதத் தலமான வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு மதுக்கடையால் அந்த பேருந்து நிலையமே திறந்தவெளி மது அருந்தும் கூடமாக மாறியிருக்கிறது.

உலகப் புகழ்பெற்றிருந்தாலும் வேளாங்கண்ணி மிகச் சிறிய ஊர். அதனால் பேருந்து நிலையமும் மிகச்சிறியதுதான். சின்னச் சின்ன கடைகள் சூழ இருந்த பேருந்து நிலையம் கடந்த பத்தாண்டு காலத்தில்தான் கொஞ்சம் கொஞ்ச

மாக வசதிகளோடு பளபளக்கத் தொடங்கியிருக்கிறது. பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம் சொந்தமாக வணிக வளாகம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறது. அந்த கடைகளில் 15-ம் எண் கடையில் டாஸ்மாக் கடையும் இருக்கிறது. அதுதான் மொத்த பேருந்து நிலையத்துக்கும் தற்போது பெரும் இடையூறாகவும் அவலமாகவும் இருக்கிறது.

வேளாங்கண்ணிக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து போகிறார்கள். அவர்கள் வந்து பேருந்து நிலையத்தில் மாதாவை காணப்போகும் பரவசத்தோடு இறங்கினால் அங்கே மது குடித்த மயக்கத்தில் திரியும் தன்னிலை மறந்தவர்களையும், பேருந்து நிலையம் முழுவதிலும் ஆங்காங்கே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருப்பவர்களையும்தான் பார்க்க முடியும். யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிடைத்த இடத்தை ‘பார்’ என நினைத்துக் கொண்டு கும்பலாக உட்கார்ந்து ஊற்றிக் கொண்டிருப்பார்கள் குடிமகன்கள்.

பேருந்து நிலையமாயிற்றே குழந்தைகள், பெண்கள் வருகிறார் களே என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட குடிமகன்களுக்கு இருப்பதில்லை. வெளியூர் பக்தர்கள் மட்டுமல்ல, உள்ளூர்க்காரர்களும் அந்தப் பக்கம் வந்துதான் ஆகவேண்டும். காரணம் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பால்பூத் என்று எல்லாமும் அங்கேதான் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்று தேவைப்பட்டாலும் பேருந்து நிலையத்துக்கு வந்து குடிமகன்களின் கலாட்டாவையும், வசைமொழிகளையும் சந்தித்துதான் ஆகவேண்டும். குடிமகன்களைத் தட்டிக் கேட்டால் அடிதடி ஆகிறது.

ஒவ்வொரு நாளும் அடிதடி, பெண்களிடம் கலாட்டா என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கியதும் மதுக்கடையைப் பார்த்த உற்சாகத்தில் மதுவை அருந்திவிட்டு போதையில் கடலில் குளிக்கும்போது காணாமல்போய் பின்னர் சடலமாகத்தான் மீட்கப்படுகின்றனர். இப்படி பலமுனை ஆபத்துகளை தன்னகத்தே வைத்திருக்கிற மதுக்கடையைப் பேருந்து நிலையத்தில் வைத்

திருப்பது சரிதானா நியாயம்தானா? என்று கேட்டதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ‘தி இந்து’விடம் கூறியது:

“சத்தியமா நியாயம் இல்லை, அதனால்தான் 2002 டிசம்பர், 2003 ஜூன் என்று இரண்டு முறை பேருராட்சியில் அந்த மதுக்கடையை அகற்றக் கோரி தீர்மானம் போட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால், அதற்கு பலன்தான் இல்லை. நாங்கள் என்ன செய்வது? கடையை அகற்றவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறோம்.

டாஸ்மாக் நிர்வாகம் இதில் வரும் வருமானத்தை மட்டும் தான் பார்க்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைப் பார்க்க மறுக்கிறது. மோர்க்கார சிறுவனுக்கு மாதா காட்சி கொடுத்த இடத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த மதுக்கடையை அந்த இடத்தின் புனிதம் கருதியாவது உடனே அகற்ற வேண்டும்” என்று அவரும் சேர்ந்து கோரிக்கை வைக்கிறார்.

மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் கொஞ்சம் மனசு வைக்கத்தான் வேண்டும்.

வார கடைசியில் ஒரு நாள் வியாபாரம் ரூ.5 லட்சம்

சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பொருள்கள் வாங்குவதற்காக நகரத்துக்கு வரும் பெரும்பாலான ஆண்கள் தாங்கள் கொண்டுவரும் பணத்தில் பாதிக்கும் அதிகமாக டாஸ்மாக் கடைக்குதான் செலவிடுகின்றனர். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் உள்ள 15-ம் எண் டாஸ்மாக் கடையின் ஒரு நாள் சராசரி வியாபாரம் ரூ.3 லட்சம். அதுவே வார கடைசி என்றால் ரூ. 5 லட்சம் முதல் 6 லட்சம். உள்ளூர் கடை என்றால் சராசரியாக நாளைக்கு ரூ.1.5 லட்சம் விற்பனை ஆவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x