Published : 26 Jan 2014 07:48 PM
Last Updated : 26 Jan 2014 07:48 PM
திருச்சி விமான நிலையத்தில் நாள்தோறும் ஓரிருவர் தங்கம் கடத்தி வந்து சுங்கத்துறையினரிடம் சிக்கிக் கொள்வது வழக்கமாக நிகழ்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்தால் கணிசமாக லாபம் கிடைக்கிற காரணத்தால் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது.
ஜன.18-ல் மலேசியா மற்றும் சிங்கப்பூர் விமானங்களில் திருச்சிக்கு வந்த 3 பயணிகளிடமிருந்து அரை கிலோ எடையுள்ள தங்கம், 19-ம் தேதி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேக் அபுபக்கர் என்கிற பயணியிடமிருந்து 1 கிலோ எடை கொண்ட தங்கம், 23-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து 2 கிலோ எடை கொண்ட தங்கத்தை விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இவை பயணிகளால் பல்வேறு விதங்களில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட தங்கங்கள்.
தங்கம் கொண்டுவர அனுமதி…
உலகில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என பெயர் பெற்ற இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த ஆண்டு கடுமையாகச் சரிந்தது. தங்கத்தில் முதலீடு செய்வதுதான் கரன்சி மதிப்பு வீழ்ச்சியடைய முதற்காரணம் என்கிற முடிவிற்கு வந்த மத்திய அரசு, தங்கம் இறக்குமதி செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகள் ஆண்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கும்,பெண்கள் ரூ.1 லட்சம் மதிப்பிற்கும் தங்கம் கொண்டுவர அனுமதித்த மத்திய அரசு அதற்கு மேற்பட்ட தொகைக்கு கொண்டுவரப்படும் தங்கத்திற்கு 12 சதவீத இறக்குமதி வரி செலுத்த வேண்டுமென்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
கடத்தல் அதிகரிப்பு ஏன்?
சர்வதேசச் சந்தை விலைக்கும் தமிழக மார்க்கெட் விலைக்கும் ஒரு கிராமிற்கு சராசரியாக ரூ.70 வித்தியாசம் உள்ளது.1 கிலோ தங்கம் கடத்தி வந்தால் ரூ.70 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். அரசு நிர்ணயித்த 12 சதவீத வரி செலுத்தினால் வெளிநாடு போய்வரும் செலவு, சுங்கத்துறையினர் நடைமுறைகள் ஆகியவற்றைக் கழித்துப் கணக்குப் பார்த்தால் நஷ்டம்தான் மிஞ்சும். அதனால்தான் கடத்தல் அதிகரிக்கிறது என்கிறார்கள் இந்த தொழிலில் உள்ளவர்கள்.
அதேசமயம் சுங்கத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளைச் சரிக்கட்டி தங்கம் கடத்துவது பெரிய அளவில் நடக்கிறது. இதனால் இறக்குமதி வரி மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் சில ஊழல் பேர்வழிகளின் கஜானாவிற்கு செல்கிறது. அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது ஊழல் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது.
குருவிகள் என்கிற அடைமொழியில் அழைக்கப்படும் நபர்கள் இந்த தங்கக் கடத்தலுக்கு உதவுகின்றனர். ஒருமுறை தங்கம் கொண்டுவர இவர்களுக்கு கடத்தல் ஆசாமிகள் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.10ஆயிரம் வரை அளிக்கின்றனர். பெரும்பாலும் துணிச்சல் மிக்க இளைஞர்களையே இந்த கடத்தல் தொழிலுக்குத் தேர்வு செய்கின்றனர்.
வியாபார போட்டியில் சில சமயம் தங்கம் கடத்துவது பற்றி கண்டிப்பான சுங்கத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து எதிர்தரப்பினரை மாட்டிவிடுவதும் உண்டு. கிலோ கணக்கில் தங்கம் சிக்குவது இதுபோன்ற போட்டிக் குழுக்களின் தகவல்களால்தான். பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தலில் ஈடுபட்டு சிக்கிக்கொள்ளும் குருவிகள் பல கட்ட சம்பிரதாயங்கள் முடிந்து பிறகு அவர்களது பாஸ்போர்ட்டை வாங்குவதற்குள் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டும்.
சுங்கத்துறையினர் தங்கம் பறிமுதல் செய்யும்போது 12 சதவீத வரியை செலுத்தி தங்கத்தைப் பெற்றுச் செல்லலாம். அப்படி வரி செலுத்த இயலாதவர்கள் கடத்தல் வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.
கேள்வி மேல் கேள்வி…
12 சதவீத வரி செலுத்தினாலும் சும்மா விடுவதில்லை சுங்கத்துறையினர்.அது குறித்த தகவலை வருமான வரித்துறைக்கு தெரிவித்துவிடுகின்றனர். அவர்கள் இவ்வளவு தங்கம் வாங்க பணம் வந்தது எப்படி? என கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். இந்த நடைமுறைகளை சரிசெய்வதற்குள் தாவு தீர்ந்துபோகும். ஆதலால் கடத்தல் தொழிலைக் கைவிட்டு பணம் சம்பாதிக்கக் கூடிய வேறுபல தொழில்களில் ஈடுபட்டு கவுரவமாக வாழ்வதே சிறந்தது என்கிறார்கள் இந்தத் தொழிலில் இறங்கி பணத்தை இழந்த முன்னாள் கடத்தல் புள்ளிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT