Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM
உழவர் திருநாள் என்ற தைப்பொங்கல் கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு உற்சாகத் திருவிழாவாக நடந்தேறியது. அதற்குக் காரணம், விவசாயம் கை கொடுத்திருப்பதுதான்.
மேட்டூரில் காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டாலும், அதைக் கொண்டு டெல்டாவில் ஒரு போக சாகுபடி மிக நல்லபடியாக விளைந்துள்ளது. அதன் காரண மாக உண்மையிலேயே உழவர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடனே கொண்டாடினர்.
கடந்த ஆண்டு எல்லா ஊர்களிலுமே கரும்புகள் வாங்க ஆளில்லாமல், கட்டுகட்டாக அப்படியே போட்டுவிட்டு வீடு திரும்பினர் விவசாயிகள். ஏனெனில், கரும்பு வாங்கக் கூட மக்கள் கையில் பணம் இல்லை. ஆனால், இந்த ஆண்டு எல்லா இடங்களிலும் கரும்பு விற்றுத் தீர்ந்தது. போகி, பொங்கல் நாள்களிலேயே அனைத்தும் விற்றுவிட்டன. மாட்டுப் பொங்கல் தினத்தில் இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
“தானே, நீலம் புயல்களாலும், கடந்த ஆண்டு கடும் வறட்சியாலும் டெல்டா விவசாயிகள் வருமானத்தை இழந்து அரசின் இழப்பீட்டுக்காக காத்திருந்தனர். குறிப்பாக, கடந்த ஆண்டு வறட்சியின் காரணமாக 12-க்கும் அதிகமான விவசாயிகள் வாழ வழித் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டனர். பலர் தங்களது நிலங்களை விற்றுவிட்டனர். விவசாயிகளின் வீடுகளில் பல ஆண்டுகளாக விசேஷங்கள் நடக்கவில்லை. விவசாயத்தை மட்டும் நம்பாமல் மற்ற வழிகளில் வருமானம் கிடைத்தவர்கள் மட்டுமே ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்த ஆண்டும் அதே நிலை நீடித்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்த நிலையில், இயற்கை வழிகாட்டிவிட்டது” என்றார் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் வலிவலம் சேரன்.
புயல் பாதிப்புகள் இல்லாததை விட அதிக மழை இல்லாததும் சம்பா சாகுபடி நன்கு விளைய காரணமாக அமைந்தது. “மழை இல்லாமல் காய்ந்து கெடுக்கும் அல்லது அதிகமாகப் பெய்து வெள்ளப் பெருக்கால் விளைச்சலைக் கெடுக்கும்” என்பர். ஆனால், இந்த ஆண்டு அப்படி இல்லாமல் தேவையான அளவுக்கு சீரான மழை பெய்து உதவியதால் நல்ல விளைச்சல் இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். அவர்களது நம்பிக்கையைப் பொய்யாக்காமல் தற்போது அறுவடை செய்யப்படும் பகுதிகளில் ஏக்கருக்கு 25-லிருந்து 30 மூட்டைகள் (60 கிலோ கொண்டது) வரை மகசூல் கிடைக்கிறது. இதில், அதிக லாபம் கிடைக்கவில்லை என்றாலும், முதலீட்டையும், கொஞ்சம் லாபத்தையும் எடுத்துவிடலாம் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இது ஒட்டுமொத்த டெல்டா பகுதிக்குமான நிலைமை இல்லை. திருவாவூர், நாகை மாவட்டங்களின் சில பகுதிகளில் மானாவரி சாகுபடி செய்யப்பட்டிருந்த பகுதிகள் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி சேதமடைந்து உள்ளன. நாகப்பட்டினம் மாவட் டத்தில் கீழ்வேளுர், தலைஞாயிறு பகுதிகளில் சூறை நோய் தாக்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் நல்ல விளைச்சல் இருந்தாலும், உய்யக்கொண்டான், கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. டெல்டா பாசனப் பகுதியின் மொத்தப் பரப்பில், சிறிய பகுதியே பாதிக்கப்பட்டதால் உற்பத்திக்கு பாதிப்பு இருக்காது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பெரிய பாதிப்புகள் இல்லாததால் விளைச்சல் பெருகியுள்ளது.
சம்பா நெல் கைக்கு வந்திருப்ப தால் விவசாயிகள் புது நெல்லில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைய லிட்டு பொங்கலை கொண்டாடினர். மாட்டுப் பொங்கலான புதன் கிழமை தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, படையலிட்டு பொங்கல் ஊட்டி வழிபட்டனர். எல்லா ஊர்களிலும் பொங்கல் பொருள்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நெல், பிள்ளைகள் ஒருசேர வீடு வந்திருப்ப தாகக் கருதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT