Published : 27 Jan 2014 07:18 PM
Last Updated : 27 Jan 2014 07:18 PM
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக திருப்பத்தூர் உள்ளது. 1911-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரே இடத்தில், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தீயணைப்புத் துறை, காவல் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலகங்களும் இயங்கி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக திருப்பத்தூர் மிகவும் பின் தங்கிய பகுதியாகவே உள்ளது. ஜவ்வாது மலை, ஏலகிரி மலை உள்ளிட்ட கிழக்கு தொடர்ச்சி மலை திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இப் பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் சமூக ஆர்வலர்கள், சேவை சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திருப்பத்தூரை தலைநகரமாக கொண்டு தனி மாவட்டம் உதயமாக வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். நாட்றம்பள்ளி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் திருப்பத்தூரை தலைநகரமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்து இருந்தார். ஆனால், இன்றுவரை திருப்பத்தூர் தனி மாவட்டமாக உதயமாகவில்லை.
இது குறித்து அப்பகுதியைசேர்ந்த பொது மக்கள் கூறுகையில், ‘‘ஜோலார் பேட்டை எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கே.சி. வீரமணி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதற்கான முயற்சி எடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் மிக விரைவில் திருப்பத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். மூன்று வட்டங்களைக் கொண்ட அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
திருப்பத்தூர் பகுதியில் 6 நகராட்சிகளும் 5-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளும், பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. திருப்பத்தூரிலிருந்து இந்தியா முழுவதும் பயணம் செய்யத் தேவை யான பஸ் வசதி உள்ளது. திருப்பத்தூர் பகுதியில் உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் வசிக்கின்றனர். அருகே ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளும் உள்ளது. இப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். திருப்பத்தூரில் தொழில் பேட்டை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
கனரக வாகனங்கள் திருப்பத்தூர் நகரின் உள்ளே செல்லக்கூடாது என வேலூர் ஆட்சியர் அறிவித்து இருந்தார். ஆனால் சமீப காலமாக கனரக வாகனங்கள் டோல் கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க திருப்பத்தூர் நகரின் உள்ளே செல்கின்றன.
இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. திருப்பத்தூரில் உள்ள பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக உள்ளன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குவதாலும் வாகன நெரிசல் அதிகரிக்கிறது. போக்குவரத்தை உடனே சீரமைக்க வேண்டியது மிக அவசியம்.
பின் தங்கிய பகுதியாக உள்ளதால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டும் தொழில் இல்லாததால் பல்வேறு மக்கள் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று விடுகின்றனர். அனைத்து மக்களின் வளர்ச்சிக்காவும் தொழிற்பேட்டை துவங்க வேண்டும். 15 ஆண்டு கால கோரிக்கையான திருப்பத்தூரை தமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.
வேலூர் மாவட்டத்தின் எல்லை நகரமான திருப்பத்தூருக்கு இருந்த நாடாளுமன்றத் தொகுதி அந்தஸ்தும் கடந்த தேர்தலின் போது பறிக்கப்பட்டு, திருவண்ணாமலை தொகுதியோடு இணைக்கப்பட்டது. இதனால், தாங்கள் தனிமைபடுத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் திருப்பத்தூர் மக்கள் இருக்கிறார்கள். தனி மாவட்டம் என்ற அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT