Published : 26 Jan 2014 07:39 PM
Last Updated : 26 Jan 2014 07:39 PM

கிருஷ்ணகிரி பாறை ஓவியத்தில் கழுதை உருவம்!: 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் முதன்முறையாக கழுதை உருவத்தை வரவாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் பெண்ணை யாறு தொல்லியல் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழகம் முழுக்கச் சென்று பல்வேறு வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வரலாற்றுச் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பதிவு செய்து வருகின்றனர். மேலும், வரலாற்றுச் சான்றுகளை அழிவிலிருந்து காக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் பதிவு

சில மாதங்களுக்கு முன் இவர்களது ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் குரங்கு உருவம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பாறை ஓவியங்களில் குரங்கு உருவம் இருப்பது அரிதானது. இந்த நிலையில், தற்போது பாறை ஓவியத்தில் கழுதை உருவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் கழுதை உருவம் இருப்பதாக எந்தச் சான்றும் பதிவு செய்யப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் கண்டறியப்பட்ட பழைமை வாய்ந்த கழுதை உருவ பாறை ஓவியம் கிருஷ்ணகிரியில் தற்போது கண்டறியப்பட்டதேயாகும்.

இந்த ஓவியம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கழுதையின் பயன்பாடு இருந்திருப்பது இந்த ஓவியத்தின் மூலம் உறுதியாகிறது.

மலைக் குன்று

இந்த ஓவியம், கிருஷ்ணகிரி மாவட்டம், மேல்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள மலைக்குன்று ஒன்றில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் சுகவன முருகன், சதாநந்தன் கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த ஓவியத்தைக் கண்டறிந்தவர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியது:

இதுவரை அறியப்பட்ட பழமையான பாறை ஓவியங்களில் குதிரை, எருது, பசு, மீன், மயில் என விலங்குகளும், பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுதான் முதன்முறையாக கழுதை ஓவியம் கண்டறியப் பட்டுள்ளது. இதில், கழுதையின் மீது வீரன் ஒருவன் வாளை ஏந்தியபடி சவாரி செய்கிறான். இந்த தொகுப்பில் இரு கோலங்கள், ஒரு மனிதன், ஒரு விலங்கு, ஒரு கை உள்பட 7 ஓவியங்கள் உள்ளன.

சுண்ணாம்புக் கலவை

தமிழகத்தில் பல இடங்களிலும் இதுவரை ஏராளமான கை ஓவியங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த கை ஓவியம் சிறப்பான வகையில், ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் கை எனக் கருதும் அளவு சிறியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்துமே வெண்சுண்ணம் எனப்படும் சுண்ணாம்புக் கலவையால் வரையப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில், இந்த கழுதை ஓவியம் கண்டறியப்பட்டது ஒரு மைல்லாகும்.

தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் குன்று இருப்பதால், அடிவாரத்தில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன. குன்றின் உச்சியில் உள்ள சிறிய காளியம்மன் கோயில் அருகே இருப்பதால், இந்த பாறை ஓவியம் சிதைக்கப்படாமல் தப்பித்துவிட்டது. அந்த சிறு கோயிலை ஒட்டிய பாறைகளின் மீது அமைந்துள்ள பெரிய பாறை ஒன்றின் விதானப் பகுதியில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிலர் இந்தப் பாறை மீது கிறுக்கி, சேதப்படுத்தியுள்ளனர். மேலும், எந்நேரமும் இந்த பாறைகள் உடைத்து நொறுக்கப்படலாம் என்ற சூழலும் நிலவுகிறது. அரசு சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற வரலாற்று ஆவணங்களைக் காக்க முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x