Last Updated : 23 Feb, 2017 12:01 PM

 

Published : 23 Feb 2017 12:01 PM
Last Updated : 23 Feb 2017 12:01 PM

என்றும் காந்தி!- 16. சம்பாரணில் தொடங்கிய சத்தியாகிரகம்

சம்பாரண் என்னென்ன இடர்ப்பாடுகளையும் வெற்றி தோல்விகளையும் வைத்திருக்கிறது என்று தெரியாமல், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தன் மற்ற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு ராஜ்குமார் சுக்லாவுடன் சம்பாரணுக்கு காந்தி பயணித்தார். இதுபோன்ற திட்ட மாற்றங்கள் அவருக்கு ஒன்றும் புதிதில்லை. தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தின்போதும் இதுபோல் நிறைய அவர் எதிர்கொண்டிருக்கிறார்.

போராட்டங்களின்போது கைதுசெய்யப்படும் சந்தர்ப்பமோ, போராட்டத்துக்கு வலுசேர்ப்பதற்காக இங்கிலாந்துக்குப் பயணம் செய்யும் அவசியமோ ஏற்படும்போதெல்லாம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டிய திறனை அவர் தனது சகாக்களுக்கு ஏற்படுத்தியிருந்தார். ஒரு போராட்டத்தில் எப்படியெல்லாம் இடையூறும் மாற்றமும் வரக்கூடும் என்பதையெல்லாம் முன்பாகவே உத்தேசித்து அதற்கேற்பத் தன் நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளும் வழக்கம் ஆரம்பத்திலிருந்தே காந்தியிடம் இருந்தது. ஆகவே, சம்பாரண் புறப்படுவதற்கு முன்பாகத் தன் ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிவிட்டே வந்திருந்தார்.

போகும் வழியில் அவர் ராஜ்குமார் சுக்லாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டிருந்தார். மிகவும் அப்பாவியாகவும் வறியவராகவும் இருந்தாலும் விவசாயிகளின் இன்னல்களுக்கு முடிவு காண வேண்டும் என்ற மன உறுதி கொண்டவராக சுக்லா இருந்ததை காந்தி கண்டார். பயணத்தின் இடையில் அவர்கள் பாட்னா வந்து சேர்ந்தார்கள். அங்கே காந்திக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. சுக்லா, காந்தியை அழைத்துக்கொண்டு வழக்கறிஞர் ராஜேந்திர பிரசாத்தின் வீட்டுக்குச் சென்றார். (பின்னாளில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் முக்கியமான சகாவாகவும் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் ஆகவிருந்த அதே ராஜேந்திர பிரசாத்தான்!)

அவர்கள் போன நேரத்தில் ராஜேந்திர பிரசாத் வீட்டில் இல்லை. ஏழை விவசாயி போன்று உடையணிந்திருந்த காந்தியைப் பார்த்ததும் ராஜேந்திர பிரசாத் வீட்டு வேலையாட்கள் காந்தியைத் தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்று கருதி உள்ளே அனுமதிக்கவில்லை. கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குடிப்பதற்கும் வீட்டின் உள்ளே இருந்த கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கவில்லை. பிறகு, வெளிப்புறம் இருந்த கழிப்பறையை காந்தி பயன்படுத்திக்கொண்டார். இது போன்ற பாகுபாடுகளெல்லாம் காந்திக்கு ஒன்றும் புதிதில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து அவருக்கு இந்த அனுபவம் தொடர்கிறது. ஆகவேதான், இந்தியாவுக்கு வந்த பிறகு தன்னை ஏழை எளிய மக்களில் ஒருவனாகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் சகோதரனாகவும் அடையாளப்படுத்திக்கொண்டார்.

ராஜேந்திர பிரசாத் இல்லை என்பது தெரிந்ததும், லண்டனில் படித்தபோது தனக்கு அறிமுகமாகியிருந்த பிஹாரியான மஷருல் ஹக்கின் நினைவு காந்திக்கு வந்தது. 1915-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அவரைச் சந்தித்தபோது காந்தி எப்போது வேண்டுமானாலும் பாட்னாவில் உள்ள தன் இல்லத்துக்கு வரலாம் என்று ஹக் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆகவே, தான் பாட்னாவுக்கு வந்திருப்பதையும் தன் பயணத்தின் நோக்கத்தையும் குறிப்பிட்டு ஹக்குக்குள் ஒரு குறிப்பை அனுப்புகிறார் காந்தி. ஹக்கும் உடனடியாகத் தன் காரில் வந்து காந்தியைச் சந்திக்கிறார். திர்ஹத் சரக கமிஷனரும் பிஹார் தோட்ட முதலாளிகளின் சங்கமும் முஸாஃபர்பூரில் இருப்பதாகவும் காந்தி முதலில் அங்கு செல்லலாம் எனவும் ஹக் யோசனை கூறினார். அவரே, காந்தியை முஸாஃபுர் ரயிலில் ஏற்றிவிட்டார். முஸாஃபர்பூர் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஜே.பி. கிருபளானிக்கும் காந்தியின் வருகை குறித்துத் தந்தி அனுப்பப்பட்டது.

கிருபளானியுடனான முதல் சந்திப்பு!

நள்ளிரவில் காந்தி முஸாஃபபூரை அடைந்தார். காந்திக்காக கிருபளானியும் அவரது மாணவர்களும் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். காலணி அணியாமலும் சாதாரண வேட்டி, குர்தா, தலைப்பாகை அணிந்தும் சிறு மூட்டையைக் கக்கத்தில் இடுக்கியபடியும் வந்த காந்தியை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. ராஜ்குமார் சுக்லாதான் அவர்களுக்கு காந்தியை அறிமுகம் செய்துவைத்தார். மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் காந்தியை வரவேற்றார்கள். தனது ஆசிரியர் பணியை ராஜிநாமா செய்திருந்த கிருபளானி காந்தியை அழைத்துக்கொண்டு தனது நண்பரும் பேராசிரியருமான மல்கானியின் வீட்டுக்குச் சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கினார். சம்பாரண் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி இரவு முழுவதும் கிருபளானி காந்திக்கு விளக்கினார்.

ராஜேந்திர பிரசாத், இன்னபிற வழக்கறிஞர்கள்…

விடிந்ததும் வழக்கறிஞர்கள் சிலர் வந்து காந்தியைச் சந்தித்தார்கள். அவர்களில் ராம்நவமி பிரசாத்தும் ஒருவர். பேராசிரியரின் இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க முடியாது என்றும் வழக்கறிஞர் கயா பிரசாத்தின் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் காந்தியிடம் கூறினார். காந்தியும் அதற்குச் சம்மதித்து கயா பிரசாத் வீட்டுக்குச் சென்றார். அங்கே, காந்தியை ராஜேந்திர பிரசாத்தும் பிரஜ்கிஷோர் பிரசாத்தும் சந்தித்தார்கள். இன்னும் பல வழக்கறிஞர்களும் சந்தித்தார்கள். எல்லோரிடமும் பேசிய பிறகு காந்திக்கு ஒரு உண்மை புரிந்தது. பல வழக்கறிஞர்கள் விவசாயிகளுக்கு உதவினாலும் பெரும்பாலானோர் பணத்துக்காக விவசாயிகளைச் சுரண்டியிருக்கிறார்கள். அவர்கள் வாங்கிய கட்டணம் காந்தியை மலைக்க வைத்தது. அப்போதே ஆயிரக் கணக்கில் கட்டணம் பெற்றிருக்கிறார்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு யாரும் உதவக் கூடாது என்று காந்தி ஆரம்பத்திலேயே திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

சட்டபூர்வமாக எந்த உதவியும் தாங்கள் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறிய அந்த வழக்கறிஞர்களிடம் காந்தி, அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கூறிவிட்டார். எழுதுதல், மொழிப் பிரச்சினையைத் தீர்த்தல், ஆவணங்கள், மக்கள் கூற்று போன்றவற்றை மொழிபெயர்த்தல் போன்றவற்றுக்குத்தான் தனக்கு உதவி வேண்டும் என்று காந்தி கூறினார். கூடவே, இந்தப் போராட்டத்தில் சிறை செல்லும் அபாயமும் இருக்கிறது; அதற்கும் தயாராக இருந்தால் தனக்கு உதவலாம் என்று காந்தி அவர்களிடம் தெளிவுபடுத்தினார். இந்த உதவிகள் அனைத்துக்கும் கட்டணம் கொடுக்க முடியாது. மக்கள் மீது அன்பு கொண்டு ஒரு சேவை போலக் கருதி இவற்றைச் செய்ய வேண்டும் என்று காந்தி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞர்களும் இன்னபிற இளைஞர்களும் தங்களுக்குள் கலந்தாலோசித்தார்கள். தங்களுக்கு அந்நியரான காந்தியே தங்கள் பிரதேசத்து விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக வந்திருக்கும்போது தாம் அனைவரும் காந்திக்குத் துணைநிற்பதுதான் நியாயம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். ஆகவே, அவர்கள் காந்தியிடம் தங்கள் முடிவைத் தெரிவித்தார்கள்: ''நீங்கள் எதைச் சொன்னாலும் செய்வதற்குத் தயாராக சிலர் எப்போதும் உங்களுடன் இருப்போம். வேறு சிலர் நீங்கள் அழைக்கும்போது வருவார்கள். சிறைக்குச் செல்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு முற்றிலும் புதிய விஷயம். அதற்கு நாங்கள் எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்கிறோம்.'' (Gandhi and Champaran, D.G. Tendulkar).

இவை எல்லாமே சம்பாரண் சத்தியாகிரகத்தைப் பற்றி காந்திக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழக்கறிஞர்களுடனும் விவசாயிகள் பிரதிநிதிகளுடனும் காந்தி விவாதித்தார். இதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அவற்றைப் பதிவு செய்வது முதன்மையான பணி. அதே நேரத்தில் ஆங்கிலேயத் தோட்ட முதலாளிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் காந்தி முடிவெடுத்தார். இதற்காக பிஹார் தோட்ட முதலாளிகள் சங்கத்தின் தலைவர் ஜே.எம். வில்சனையும் திர்ஹத் சரகத்தின் கமிஷனரையும் சந்திப்பதற்கு காந்தி அனுமதி கேட்டிருந்தார். அனுமதியும் கிடைத்தது.

- ஆசை, தொடர்புக்கு:asaithambi.d@thehindutamil.co.in

(நாளை…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x