Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகேயுள்ள காட்டாகரம் ஊராட்சியில் உள்ள பழமையான நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், புதிய தொட்டியை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சந்தூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் சந்தூரில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 1970-ல் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இந்த தொட்டி கட்டப்பட்டது. அப்போதைய ஊராட்சித் தலைவராக இருந்த வெங்கடேச செட்டியார் என்பவரின் முயற்சியில் கட்டப்பட்ட இந்த தொட்டியின் கீழ்பகுதியில் பராமரிப்பாளர் தங்குவதற்கும், மையப் பகுதியில் பொருட்களை வைப்பதற்கான அறையும் கட்டப்பட்டது.
மேலும், இந்த தொட்டிக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக அதன் அருகிலேயே கிணறும் வெட்டப்பட்டது. தொட்டியின் அருகில் 10 குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிலர் இரவு நேரத்தில் கிணற்றுக்குள் கழிவுப் பொருட்களை கொட்டியதால் கிணற்று நீர் மாசுபட்டது. மாசடைந்த நீரை வெளியேற்றி விட்டு, கிணற்றுக்கு மூடி போட்டனர். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு இந்தக் கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டது.
பின்னர், கிணற்று நீரில் ஃபுளோரைடு தன்மை அதிகமானதால், கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு 43 ஆண்டுகளான நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் தொட்டி பழுதடைந்துள்ளது. தொட்டியில் செடி, கொடிகள் முளைத்து, கட்டடத்தில் விரிசல் விழுந்துள்ளது. எந்த நேரத்திலும் குடிநீர்த் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, இந்தத் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைக் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காட்டாகரம் ஊராட்சித் தலைவர் மனோரஞ்சிதம் குமார் கூறுகையில், பழைய தொட்டியை மாற்றியமைத்து, புதிய தொட்டியை அமைக்க வேண்டுமென அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், விரைவில் புதிய தொட்டி அமைக்கப்படும் என்றும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT