Last Updated : 15 Dec, 2013 10:46 AM

 

Published : 15 Dec 2013 10:46 AM
Last Updated : 15 Dec 2013 10:46 AM

தோசையை சுட வேண்டாம்.. பிரின்ட் எடுத்து சாப்பிடலாம்!

பிட்சா, பர்கர் போன்ற உணவுகளை இனி சமைத்து சாப்பிடவேண்டிய அவசியம் இல்லை. பிரத்தியேக ‘3டி பிரின்டரில்’ பிரின்ட் போட்டு சாப்பிடலாம். இதற்கேற்ற வகையில் சமையல் பிரின்டர் கருவியை ஸ்பெயின் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

புத்தகப் பக்கங்கள், புகைப்படங் களை ஸ்கேன் செய்கிறோம், ஜெராக்ஸ் எடுக்கிறோம். பிரின்ட்டும் எடுக்க முடிகிறது. இதேபோல ஏன் ஒரு நாய்க்குட்டி, மேஜை, நாற்காலியை ஸ்கேன், ஜெராக்ஸ், பிரின்ட் எடுக்க முடியாது? இப்படி வித்தியாசமாக சிந்தித்ததன் விளைவுதான் ‘3டி பிரின்டிங்’ தொழில்நுட்பம். இது புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே உதித்த சிந்தனைதான். 1984-ம் ஆண்டிலேயே 3டி பிரின்டர்களும் அறிமுகமாகிவிட்டன. கடந்த ஓரிரு ஆண்டுகளாக இத்தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. மருத்துவம், விமான இன்ஜினியரிங், நகை தயாரிப்பு, பொம்மைகள் தொடங்கி உள்ளாடைகள் தயாரிப்பு வரை 3டி பிரின்டிங்கில் புகுந்துவிளையாடுகிறார்கள்.

துறைகள் பலவானாலும் லாஜிக் ஒன்றுதான். பிரின்ட் செய்யப்பட வேண்டிய பொருளை முதலில் முப்பரிமாணத்தில் பல்வேறு திசைகளில் இருந்தும் ஸ்கேன் செய்ய வேண்டும். ஜெராக்ஸ் எடுப்பதென்றால், வெற்றுத் தாளில் மை பூசுவதோடு முடிந்துவிடும். முப்பரிமாணத்தை அச்சிடுவதென்றால் சாமானியமா? கீழிருந்து ஒவ்வொரு லேயராக அச்சிட்டுக்கொண்டே வரவேண்டும். எல்லா அடுக்குகளையும் அச்சிட்டு முடித்தால், முப்பரிமாண ‘பிரின்ட்’ தயார்!

சாக்லேட் தயாரிக்கும் 3டி பிரின்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானது. பிரத்தியேக ஸ்கேனர் முன்பு ஒரு சில நிமிடங்கள் நின்றால், நம் முகத்தை அது ஸ்கேன் செய்யும். பிறகு, நம் முகம் போன்ற சாக்லேட்டை சிறிது நேரத்தில் தந்துவிடும்.

இந்நிலையில் பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் அதிநவீன 3டி பிரின்டிங் கருவியை ஸ்பெயினின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த ‘நேச்சுரல் மெஷின்ஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘ஃபுட்இனி’ என்பது அதன் பெயர். ‘‘உணவு, தொழில்நுட்பம், கலை உணர்வு, டிசைனிங் அனைத்தையும் கலந்து இந்த மெஷினை உருவாக்கியுள்ளோம்’’ என்கிறார் நேச்சுரல்ஸ் மெஷின்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் லினெட் கஸ்மா. 2014ம் ஆண்டு மத்தியில் சந்தைக்கு வரவுள்ள இதன் விலை ரூ.85 ஆயிரம் இருக்கும் என்கிறார்கள்.

பீட்சா, கேக், பர்கர் தயாரிக்கத் தேவையான எல்லா மிக்ஸ்களையும் பிரின்டர் கருவியில் அதற்கென உள்ள இடங்களில் வைக்க வேண்டும். கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொடுதிரை உதவியுடன் உணவுப் பண்டங்களை ‘பிரின்ட்’ செய்ய வேண்டியதுதான்.. அப்புறம் சாப்பிட வேண்டியதுதான்.

பீட்சா, பர்கரை பிரின்ட் செய்ய ஒரு காலம் வந்தா.. நம்மூரு இட்லி, தோசை, ஊத்தாப்பத்தை பிரின்ட் செய்ய ஒரு காலம் வராதா என்ன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x