Published : 07 Feb 2014 08:00 PM
Last Updated : 07 Feb 2014 08:00 PM
சனிக்கிழமை என்றால் லட்சக்கணக்கிலும் மற்ற நாட்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வந்து போகும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் புதுவை மாநிலம் காரைக்கால்.
சுற்றியுள்ள காரைக்கால் மாவட்ட மற்றும் தமிழக கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காரைக்காலுக்குத்தான் வந்து செல்கிறார்கள். அப்படி அதிக அளவுக்கு மக்கள் வந்து போகும் அதுவும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மக்கள் வந்து போகும் நிலையில் மிகச்சிறிய பரப்பளவு கொண்ட காரைக்காலை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? ஆனால், உண்மையில் காரைக்கால் அப்படியில்லை.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ன ஆனது?
காரைக்காலின் வடக்கு நுழைவாயிலான வரிச்சிக்குடி தொடங்கி தெற்கு எல்லையான வாஞ்சூர் வரையிலும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது குப்பை. அதிலும் பாலித்தீன் குப்பைகளே அதிகம். தலத்தெரு, மாதா கோயில் வீதி, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகள் என்று காலை 10 மணிக்கு கூட குப்பைகள் நிரம்பி வழிகின்றன. லெமர் வீதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்துக் கொட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் பெரிதாக பலன் இல்லை.
சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறில் நாலு வீதிகளிலுமே சுத்தம் செய்ய முடியாமல் குப்பைகள் சேர்ந்துகொண்டே இருக்கிறது.
பல இடங்களில் குப்பைககளை கால்நடைகள் கிளறிக்கொண்டிருக்கின்றன. காரைக்கால் நகரில் குப்பைகளை அள்ளிச் சென்று சிங்காரவேலர் வீதி அருகே கொட்டி அவற்றைப் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டத்தை 10 வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கினார்கள். ஆனால் அது செயல்படவில்லை. மொத்தத்தில் காரைக்கால் நகரமே ஒரு குப்பைக் காடாகத்தான் காட்சியளிக்கிறது.
அள்ள முடியாத குப்பைகள்…
இதுபற்றி நகரவாசியும் மதிமுக மாவட்ட செயலாளருமான அம்பலவாணன் கூறும்போது, “மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் அதிகாரமில்லாமல் இருக்கிறது. அதைவிட போதுமான நிதியும் இல்லாமல் இருக்கிறது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். நகராட்சியில் 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவருகிறது. பிறகு எப்படி பணிகள் நடக்கும்?. ஆட்கள் பற்றாக்குறையால் குப்பைகள் அள்ள முடியாமல் கிடக்கிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு என்று பெயரளவுக்குத்தான் சொல்கிறார்கள். ஆனால், அது நகரையே கபளீகரம் செய்துவிட்டது. இதனால் காரைக்காலுக்கு வருகிறவர்கள் சுகாதாரக் கேட்டை அனுபவிக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது” என்கிறார்.
தனியாரிடம் ஒப்பந்தம்…
நகரின் நிலைகுறித்து நகராட்சி ஆணையர் ரேவதியிடம் கேட்டதற்கு, “குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலையில் துவங்கும் பணி மாலை வரை நடக்கிறது. மதியத்துக்குப் பிறகு எங்கும் குப்பைகள் இருக்காது.
திடக்கழிவு மேலாண்மை பணிகள் தற்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் குப்பை அள்ளிவிட்டு வந்தபிறகு அந்த இடத்தில் குப்பை கொட்டினால் அதை மறுநாள்தான் அள்ள முடியும். அதனால் குப்பை எப்போதும் இருப்பது போல் தெரிகிறது” என்றார்.
‘நகரின் தூய்மை நமக்குப் பெருமை’ என்பது காரைக்கால் நகராட்சியின் கொள்கை வாசகம். ஆனால், அதை அவர்களால் முழுமையாக எட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. அதிக அளவில் நிதி ஒதுக்கி பயனுள்ள திட்டத்தைத் தீட்டி அதன் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே காரைக்காலில் குப்பைகள் குறையும். ஆனால், அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
காரைக்கால் நகரின் ஒரு பகுதியில் உள்ள குப்பைகள், பாலித்தீன் பைகள். (அடுத்த படம்) கோட்டுச்சேரியில் குப்பைத்தொட்டியைக் கிளறும் மாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT