Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM
சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் கட்டப் பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கட்டிடங் களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு வகையில் விதியை மீறி கட்டப்பட்டதாகவே இருக்கின்றன. இதுபோன்ற கட்டிடங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க நினைத்தாலும், பல ஆயிரம் கட்டிடங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இத்தகைய கட்டிடங்கள் ஓரிரு நாளில் உருவாகிவிடவில்லை. அஸ்திவாரம் போடுவதில் தொடங்கி கட்டி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளுக்கும், விதி மீறல் செய்யப்படுவதைத் தெரிந்து கொண்டு மிரட்டும் சில அரசியல்வாதிகளுக்கும் கையூட்டு கொடுத்துவிட்டு, விதிகளை மீறி கட்டிடம் கட்டிக் கொள்ளும் போக்கு பொதுமக்கள் மனதிலேயே பதிந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.
இத்தகைய மனப்போக்கே சில ஊழல் அதிகாரிகளுக்கும், பொதுமக்களிடம் முடிந்தவரை சுருட்ட நினைக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் வசதியாகப் போய் விடுகிறது.
எளிதில் இரையாவோர்...
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கட்டிட அனுமதி அளித்து வரு கிறது. அதேபோல் தரைத் தளம் மற்றும் முதல் மாடி வரையிலான கட்டிடங்களுக்கு மாநகராட்சியும் உள்ளாட்சி அமைப்புகளும் திட்ட அனுமதி அளித்து வரு கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை 75 சதவீதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புக ளிடமிருந்துதான் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளன.
இதுபோன்ற கட்டிடங்களைக் கட்டுவோரில் பெரும்பாலானோர், வங்கியில் கடன் பெற்றோ, அல்லது வேறுவகையில் கடன் பெற்றோ வீடுகளைக் கட்டுகின்றனர். இது ஒரு வகை. ஏற்கெனவே கட்டிய வீட்டை சற்று விஸ்தரித்து கட்ட நினைப்பது மற்றொரு வகை. இவர்களும், சில காரணங்களுக்காக சிறிய அளவில் விதிகளை மீற வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேற்கண்ட இருபிரிவினர்தான், கையூட்டு பெற நினைக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எளிதில் இரையாகின்றனர்.
அரசியல்வாதிகளின் பறக்கும் படை
ஒரு காலியிடத்தில் வீடு கட்டுவதற்கு உத்தேசித்து அஸ்திவாரம் தோண்டினாலோ, அல்லது தெருவோரத்தில் மணல், ஜல்லி கொட்டினாலோ, எப்படித்தான் சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்து விடு கிறதோ, உடனே, அந்த இடத்துக்கு அவர்களே வந்தோ, அல்லது ஆட்களை விட்டோ, லஞ்சம் கேட்கிறார்கள் (கேட்டால் போட்டதை எப்படி திரும்ப எடுப்பது என்கிறார்கள்). இல்லாவிடில், அந்த இடத்தில் உள்ள சிறிய விதிமீறல்களைப் பட்டியலிட்டு, கட்டுமானப் பணி யைத் தொடரவிடாமல் மிரட்டல் விடுக்கின்றனர். கட்டிடம் முடியும் வரை குறைந்தது ஒரு லட்சம் ரூபா யாவது இவர்களுக்குக் கொடுத்துத் தொலைக்க வேண்டியுள்ளது.
இதற்கெனவே, அந்தந்த வார்டுகளில், அரசியல்வாதிகள் ஒரு “பறக்கும் படையையே” பணியில் அமர்த்தியுள்ளனர். ஒரு சிறிய சந்துக்குள் வீடு கட்டினாலோ அல்லது வீட்டை விஸ்தரித்துக் கட்டினாலோ கூட இவர்களுக்குத் தெரியாமல் போகாது. இவ்வாறு தகவல் சேகரித்த பின்னர், வீடு கட்டும் நபரின் செல்போனை மிரட்டி வாங்குகின்றனர். குறிப் பிட்ட நாளில், அவர்களுக்கு “அப்பாயின்ட்மென்ட்” கொடுக்கப் பட்டு வீட்டின் பரப்பளவுக்கும், விதிமீறல்களுக்கும் ஏற்ப கமிஷன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இதை மீறி, மாநகராட்சி அலுவலகத்தை நேரடியாக அணுகிய பலருக்கும் அனுமதி கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. சில அதிகாரிகள்-அரசியல்வாதிகள் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொள்வதே இதற்கு காரணம் என மக்கள் புகார் கூறுகின்றனர்.
வீடு கட்டத் தொடங்கியது முதல், ஒவ்வொரு கட்டத்துக்கும் லஞ்சத் தொகை, வீட்டின் பரப்பளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இதுபோதாதென்று, குடிநீர் வாரிய இணைப்பு மற்றும் மின்வாரிய இணைப்பு தரப்படுவதில் கூட அரசியல்வாதிகள் தலையீடு உள்ளதாக வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தினர் புகார் கூறுகின்றனர்.
“சமீபத்தில் என் வீட்டுக்கு ஆட்களை அனுப்பிய கவுன்சிலர் ஒருவர் ரூ.1 லட்சம் கொடுத்தால் தான் கட்டிடம் கட்ட அனுமதிப்பேன் என்று தகவல் சொல்லி அனுப்பினார். அப்படியென்றால் நான் வீடே கட்டப்போவதில்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். முதலமைச்சர் கடுமையகாக் கண்டித்தும் இவர்களில் சிலர் அடங்கவில்லை,” என்கிறார் பெரம்பூரை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அரசு ஊழியர் ஒருவர்.
இதுஒருபுறமிருக்க, அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டும் சில ரியல் எஸ்டேட்காரர்கள், ஒரு மாடி அல்லது இரண்டு மாடிக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு, இரண்டு அல்லது மூன்று மாடி குடியிருப்புகளைக் கட்டி, விதிமீறி கட்டப்படும் குடியிருப்புகளை சற்று விலை குறைத்து விற்றுவிடுகின்றனர். இதனால், அந்த குடியிருப்பில் முறையாக அனுமதி பெற்ற வீடுகளை வாங்கியவர்களுக்கும், விதிமீறிய பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை வாங்கியோருக்கும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பல நூறு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்கிறார் அயனாவரத்தை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர்.
“பொதுமக்களும் நியாயமாக நடந்து கொள்வதில்லை. பணம் கொடுத்தால் தவறை சரிசெய்து கொள்ளலாம் என்ற மனப்போக்கு ஏராளமானோரிடம் ஏற்பட்டு விட்டது. இதுவே அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வசதியாகப் போய் விட்டது,” என்கிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT