Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM
சென்னையில் உள்ள 471 பேருந்து சாலைகளில் மிதிவண்டி பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை மாநகராட்சி ஆராய்ந்து வருகிறது.
சென்னையில் மோட்டார் வாகனப் போக்குவரத்தை குறைத்து மிதிவண்டிகள் பயன்படுத்துவோர், பாதசாரிகள் ஆகியோருக்கு ஏதுவாக சென்னையில் உள்ள சாலைகளை மாற்ற மாநகராட்சி முயன்று வருகிறது.
மிதிவண்டி பாதைகளில் மற்ற வாகனங்கள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக வாகனப் பாதைக்கும் மிதிவண்டி பாதைக்கும் இடையே நடை பாதைகள் அமைக்கப்படும்.
வெளி நாடுகளில் மிதிவண்டி பாதைகளும், வாகன பாதைகளும் அருகருகே இருந்தாலும் இங்கு வாகன ஓட்டிகள் புதிய முறைக்கு பழக வேண்டும் என்பதற்காக இடையே நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. மிதிவண்டி பாதைகளை மற்ற பாதைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இடையில் சிறிய கற்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
பணிகள் ஆரம்பம்
சென்னையில் மிதிவண்டி பாதைகள் அமைக்கும் பணி முதல் முறையாக பெசன்ட் நகர் இரண்டாவது நிழற்சாலையில் தொடங்கியுள்ளது. இந்த பாதை 2.2 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அது தவிர கடற்கரை ரயில் நிலையம் அருகிலும், வாலாஜா சாலையிலும் மிதிவண்டி பாதைகள் அமைக்கும் திட்டமுள்ளது.
அதே போன்று பாண்டி பஜாரின் ஒரு பகுதியை பாதசாரிகளுக்கான இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க பல கட்டமைப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ள மாநகராட்சி டெண்டர் விடுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
வாடகை மிதிவண்டி
ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகளில் மிதிவண்டி நிறுத்தங்கள் அமைத்து அங்கிருந்து மிதிவண்டியை வாட கைக்கு எடுத்துச் செல்லும்படியான திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக மிதிவண்டி பாதைகள் அமைக்கப்பட்டுவிட்டால், மிதி வண்டி வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்த ஆரம்பித்து விடலாம்.
சீனா, சிங்கப்பூர் ஹாங்காங், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்த்து வந்ததன் விளைவாக இத்திட்டங்கள் அமல் படுத்தப்படுகின்றன. நடைபாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு மிதிவண்டி பாதைகளும் விரைவில் அமைக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT