Published : 04 Feb 2014 07:44 PM
Last Updated : 04 Feb 2014 07:44 PM
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக-வில் 16 பேர் மனு அளித்துள்ளனர். தங்களுக்கு சீட் கேட்டிருக்கும் இவர்கள் அத்தனை பேரும் ஜெயலலிதா இங்கு போட்டியிட வேண்டும் எனவும் பணம் செலுத்தியுள்ளனர்.
3 முதல்வர்களை தந்த தேனி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என மூன்று முதல்வர்களை தந்த மாவட்டம் தேனி. அதிமுக இரண்டாக உடைந்து தேர்தலை சந்தித்த போது ஜெயலலிதாவை எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துடன் சட்டமன்றத்துக்கு அனுப்பியதும் 1999-ல் டி.டி.வி.தினகரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதும் தேனி மாவட்டம்தான்.
அந்த அடிப்படையில் இம்முறையும் அதிமுக தரப்பில் வி.ஐ.பி. அந்தஸ்துடன் கவனிக்கப்படுகிறது தேனி நாடாளுமன்றத் தொகுதி, காரணம் ஜெயலலிதா பிரதமர் என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது.
களத்தில் ஓ.பி.எஸ். மகன்
தேனி தொகுதியை ஓ.பி.எஸ். தனது மகன் ரவீந்திரநாத்குமாருக்காக தயார்படுத்துவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பேச்சு உண்டு.
வரலாறு திரும்புகிறது
"கோர்ட் தீர்ப்பால் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை விட்டு இறங்கியபோது, முதலமைச்சர் பதவியை ஓ.பி.எஸ்-ஸிடம்தான் ஒப்படைத்தார். வழக்குச் சிக்கல் முடிந்து மீண்டும் ஜெயலலிதாவுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். வரலாறு மீண்டும் திரும்பக்கூடிய சூழல் உருவாகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு எம்.பி. ஆவார். மத்தியில் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு வந்தால் அவருக்காக தந்தை வழியில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் ரவீந்திரநாத்குமார். இடைத்தேர்தலில் ஜெயலலிதா தேனியில் போட்டியிட்டு எம்.பி. ஆவார்’’ இப்படிக் குதூகலிக்கிறது தேனி அதிமுக வட்டாராம்.
ஆரூணும் மகனை தயார்படுத்துகிறார்
காங்கிரஸ் கட்சியின் ஆரூண் ரஷீத்தும் தனது வாரிசு ஹசன் அலி ஆரூணை நிறுத்தும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேசமயம் வலுவான கூட்டணி இல்லாவிட்டால் ஆரூணே மீண்டும் களத்துக்கு வரலாம் என்கிறார்கள்.
வைரமுத்து சிபாரிசு
திமுக தரப்பில் பொன்முத்துராமலிங்கம், கம்பம் செல்வேந்திரன், மாவட்டச் செயலாளர் மூக்கையா, போடி முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் உள்ளிட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். இவர்களில் கம்பம் செல்வேந்திரனுக்கு வைரமுத்து சிபாரிசு செய்துள்ளாராம். ஆனால், தொகுதிவாசிகளோ, ’’அரசியல் சாணக்கியத்தனம் தெரிந்த பொன்முத்து ராமலிங்கத்தைத் தவிர வேறு யாரை நிறுத்தினாலும் ஓ.பி.எஸ்-ஸின் ’நிதி ஆளுமை’க்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாது’’ என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT