Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM
அமெரிக்க பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி ஏற்படும் என்று இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் ராபர்ட் ஷில்லர் எச்சரித்துள்ளார்.
ஜெர்மனியிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷில்லர், மேலும் இரு அமெரிக்கர்களுடன் சேர்ந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவர் சந்தை விலை, யூகமான சொத்து மதிப்பு, ஆகியன அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இதே நிலை பிரேஸில் பங்குச் சந்தைக்கும் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இன்னமும் எச்சரிக்கை மணி எழுப்பவில்லை என்று குறிப்பிடும் ஷில்லர், பல நாடுகளின் பங்குச் சந்தைகளின் குறியீட்டெண்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதேசமயம் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கொண்டே வருகின்றன. சில நாடுகளில் சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்று டெர் ஸ்பீகல் எனும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் வார இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வளர்ச்சி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதில் மிகவும் கவலைப்படத்தக்க விஷயம் என்னவெனில் அமெரிக்க பங்குச் சந்தையில் காணப்படும் எழுச்சி, அது விரைவிலேயே கடுமையான சரிவைச் சந்திக்கப் போகிறது என்பதைப் போலுள்ளது. இதற்கு முக்கியக் காரணமே நமது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருப்பதுதான் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலை மாற வேண்டுமெனில் தொழில்நுட்பத் துறையும் நிதித்துறையும் முழுமையாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியோடி ஜெனிரோ மற்றும் சா பாலோவில் ரியல் எஸ்டேட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதைப் பார்க்கும்போது 2004-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சூழலைப் போலுள்ளது. 2000-வது ஆண்டில் அமெரிக்காவில் நடுத்தர மக்கள் மத்தியில் எழுந்த பேச்சைப் போலுள்ளது இப்போதைய சூழல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2008-09-ம் ஆண்டில் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறை கடுமையான சரிவைச் சந்தித்ததில் சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை உருவானது என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய நீர்க்குமிழிகள் போல பங்குச் சந்தை உள்ளது. இது வெடித்தால் அது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீர்க்குமிழிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டவை. இது வெடித்துவிடும் என்பது முதலீட்டாளர்களுக்குத் தெரியாது. ஆனால் யூகமாக அதிகரிக்கப்பட்ட விலையேற்றம் எந்த நேரத்திலும் கீழே சரிந்துவிடும் என்ற அடிப்படை உண்மை தெரியாததுதான் இதற்குக் காரணம் என்றும் ஷில்லர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT