Published : 30 Dec 2013 08:38 PM
Last Updated : 30 Dec 2013 08:38 PM
கல்லூரி உதவி பேராசிரியருக்கான ‘நெட்’ தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு முதல்முறையாக பிரெய்லி மொழியில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதித்தேர்வு ஞாயிற்றுக் கிழமை நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். சென்னையில் 12 மையங்களில் 14,382 முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் இத்தேர்வை 5 ஆயிரம் பேர் ஏழுதினர்.
சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளி மிராண்டா டாம்கின்ஷனுக்கு முதல்முறையாக பிரெய்லி (பார வையற்றவர்கள் தடவிப் பார்த்து படிக்கும் மொழி) கேள்வித்தாள் வழங்கப்பட்டது. சமூகவியல் முதுகலை பட்டதாரியான டாம்கின்ஷன், பிரெய்லி கேள்வித்தாள் வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை யு.ஜி.சி.யிடம் மனு அளித்திருந்தார். இதற்கிடையே, யு.ஜி.சி. நெட் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி உள்பட அவர்களுக்கு வசதியான முறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஏப்ரல் 26-ம் தேதி சமூக நலத்துறை உத்தரவிட்டிருந்தது.
ஆனால் யு.ஜி.சி. சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இதுபற்றி குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, டாம்கின்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி கேள்வித்தாள் வழங்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, ஞாயிற்றுக் கிழமை நடந்த நெட் தேர்வில் டாம்கின்ஷனுக்கு பிரெய்லி கேள்வித்தாள் வழங் கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையை நிறைவேற்ற நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது மிகவும் வேதனையாக உள்ளது. தேர்வுக்கு தயாராகி இருக்க வேண்டிய நாட்களில் நீதிமன்றத்துக்கு அலைய வேண்டியாகி விட்டது. இனியாவது பிரெய்லி கேள்வித்தாளை எல்லா கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக்க வேண்டும்” என்றார்.
மற்றொரு மாற்றுத் திறனாளியான ஸ்ருதி கூறுகையில், “ஆறாம் வகுப்பில் பிரெய்லி பயின்ற எனக்கு, அது சரியாக நினைவில்லை. எனக்கான எழுத்தரை நானே தேர்வு செய்யும் முறையை இந்த ஆண்டு முதல் யு.ஜி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. அது எனக்கு வசதியாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து சென்னை பல்கலைகழகத்தைச் சார்ந்த யு.ஜி.சி. ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், “நெட் தேர்வு எழுத 164 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் டாம்கின்ஷனுக்கு செவி குறைபாடும் உள்ளதால் பிரெய்லி கேள்வித்தாள் வழங்கப்பட்டுள்ளது. வேறு எவரும் இதை கேட்கவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT