Published : 17 Feb 2014 06:48 PM
Last Updated : 17 Feb 2014 06:48 PM
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கடல் அட்டை மீதான தடை நீங்குமா என தினமும் கேள்விகள் எழுப்பியபடி மீனவர் கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 11.7.2001-ல் தடை விதித்தது. பின்னர் 5.12.2001-ம் தேதி 53 வகையிலிருந்து 23 கடல் பொருள்களுக்கான தடையை மத்திய அரசு நீக்கியது.
வெளிநாடுகளில் வரவேற்பு
கடல் அட்டைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இவற்றை அவர்கள் மருந்துகளாகவும், உணவுப் பொருள்களாகவும் பயன்படுத்தினர். இதனால் தமிழக மீனவர்கள் கடல் அட்டைகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். தற்போது கடல் அட்டைகள் சேகரிப்பு மீதான தடை இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டு காலமாக கடல் அட்டை மீதான தடை நீங்க உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பலகட்டப் போராட்டங்கள் நடத்திய மீனவர்களின் கோரிக்கையை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து பாம்பனைச் சேர்ந்த மீன் வியாபாரி அருள்ராயப்பன் கூறியதாவது:
கடல் அட்டை அழியும் நிலையில் உள்ள உயிரினம் கிடையாது. மாறாக கடல் அட்டைகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளைப் பொறிக்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றைத் தடை செய்திருப்பது அறியாமையைத்தான் காட்டுகிறது.
தனி வலைகள் இல்லை
கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கென்று தனியாக எந்த வலையும் கிடையாது. மீன் வலையில் இவை தானாகவே சிக்கிவிடும். வலையில் ஏறிய மறுகணமே இந்த அட்டைகளும் இறந்துவிடும். அவ்வாறு தவறுதலாக வலையில் சிக்கிக்கொள்ளும் கடல் அட்டை மீன்களை கரைக்கு கொண்டு வந்தால்கூட மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25000 அபராதமும் விதிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்த அட்டைகளைக் குறிவைத்துப் பிடித்தார்கள் என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரும், மத்திய அரசும் தமிழக மீனவர்களை பயங்கரவாதிகள் போன்றுதான் கையாளுகின்றனர் என்றார்.
3 வகை அட்டைகள்
இது குறித்து மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் பாலமுருகன் கூறியதாவது: பத்துக்கும் மேற்பட்ட கடல் அட்டை வகைகள் உள்ளன. ஆனால் நாங்கள் கருப்பு அட்டை, வெள்ளை அட்டை, சிவப்பு அட்டை என மூன்று வகையான அட்டைகளைப் பிடிப்பதற்குத்தான் அனுமதி கேட்கிறோம்.
கடல் அட்டை மீதான தடையை நீக்க பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் நடத்திவிட்டோம். கடல் அட்டைகள் மீதான தடையை நீக்குவோருக்குத்தான் மக்க ளவைத் தேர்தலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஓட்டுகளும் என்றார்.
மீனவர்கள் வாழ்வில் வளம் சேர்க்க வேண்டும்
இது குறித்து ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியது:
கடந்த 2001-ம் ஆண்டில் வாஜ்பாய் தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது கடல் அட்டை ஒரு அழியும் உயிரினம் என்று அதைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் கடல் அட்டையைச் சேகரித்து வந்தனர். மேலும் கடல் அட்டை உலகில் இந்தியாவைத் தவிர எந்த நாட்டிலும் அழியும் இனம் என்று அறிவிக்கப்படவில்லை, கடல்அட்டை பிடிப்பதற்கு தடையும் விதிக்கப்படவில்லை, கடல் அட்டை மீதான தடை தங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளதாக கோரி கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என ராமநாதபுரம் மீனவர்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர்.
பல வெளிநாடுகளில் கடல் அட்டையைப் பிடிப்பது நெறிப்படுத்தப்பட்டு அனுமதிக் கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில்கூட இறால் பண்ணைகள் போன்று கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதற்கு இலங்கை அரசு மானியமே வழங்குகிறது. இதே அடிப்படையில் மத்திய அரசு கடல் அட்டை மற்றும் கடல் பாசி மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வில் வளம் சேர்க்க வேண்டும்.
தினந்தோறும் தண்ணீரில் மிதந்து தங்களின் வாழ்வாதாரத்தை தேடும் மீனவர்களுக்கு கடல் அட்டை மீதான தடை நீங்கினால் அவர்களின் கண்ணீரை சிறிதளவேனும் துடைத்த பெருமை ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT