Published : 03 Feb 2017 09:33 AM
Last Updated : 03 Feb 2017 09:33 AM
தமிழகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான அருணன் ‘போராட்டங்கள்தான் சமூகத்தை வளர்த்தெடுக்கும்’ என்ற கொள்கை உடையவர். அவரது பேட்டி:
மாணவர் போராட்டம் பற்றி?
1965 மாணவர் போராட்டம்கூட இந்த அளவுக்கு வெகுமக்களை ஈர்த்ததில்லை. இது பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், மோடி அரசு தமிழகத்தின் உரிமைகளைப் புறக்கணித்து வந்ததும், செல்லா நோட்டு விவகாரமும் சேர்ந்து ஒரு கொதிநிலை உருவாகியிருந்ததுமே. அது வெடித்துக் கிளம்ப ஒரு வாய்ப்பாக மாணவர் போராட்டம் அமைந்தது. ‘தமிழக மக்களை லேசாக நினைக்கக் கூடாது’ என்பதை ஆட்சியாளர்களுக்கு இது உணர்த்திவிட்டது.
இந்தப் போராட்டத்தின் வடிவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமூக வலைதளங்கள் வழி போராளிகள் கூடுவது வேறு சில நாடுகளில் நடந்திருக்கிறது. அது தமிழகத்திலும் சாத்தியம் என்பது நிரூபணமாகியுள்ளது. அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி இப்படியொரு போராட்டத்தை நடத்த முடியும் என்பதையும் மாணவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இது சிவில் சமூகத்தின் ஆற்றலைக் காட்டுகிறது. ஆனால், மக்கள் திரள் வந்ததும் அதை வழிநடத்த மாணவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு வழிகாட்டும் குழுவை அமைத்திருக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பண்பாட்டுக் களத்திலான போராட்டம், அதன் இயல்பிலேயே விரிந்த மக்கள் திரளை ஈர்க்கத்தக்கது என்பது ஏற்கெனவே மொழிப் போராட்டத்தில் வெளிப்பட்டது. இப்போது ஜல்லிக்கட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது. பொருளாதாரப் போராட்டமானது அடிப்படையானது. ஆனால், பண்பாட்டுப் போராட்டமும் தேவை என்பது மட்டுமல்ல, அதன் மூலம்கூட வாழ்வியல் அதிருப்தி வெளிப்படக்கூடும். இதை உணர்ந்திருந்ததால்தான் கம்யூனிஸ்ட்கள் இப்போராட்டத்தை ஆதரித்தார்கள். எனினும் மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், படைப்பாளிகள் ஆகியோரை மேலும் பண்பாட்டுப் போராட்டங்களில் இறக்கிவிட நாங்கள் முன்கை எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இப்போராட்டத்தை ஆதரிப்பதில் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்களுக்குத் தயக்கம் இருந்ததா? சிலர் முகநூலில் எதிர்த்து எழுதினார்களே?
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏற்கெனவே அறிவித்திருந்தன. ஆனால், சில இடங்களில் அதில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அறிந்து, தோழர்கள் சிலர் அது தேவையா என்று கேள்வி எழுப்பினார்கள். ஜல்லிக்கட்டு நடந்தால்தான் அதிலுள்ள தீண்டாமையை எதிர்த்துப் போராட முடியும் என்று என்னைப் போன்றவர்கள் பதிவிட்டோம். பிறகு, அந்தத் தோழர்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்துப் பதிவிட்டார்கள்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. தமிழ் தேசிய இனத்தின் நியாயமான உரிமைகளை எதிரொலிப்பதாக அடையாள அரசியல் இருக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட்களின் விழைவு. அதற்கு மாறாக, பிற தேசிய இனங்கள் மீது வெறுப்பை வளர்ப்பதாக, பிரிவினை கோருவதாக அது வடிவெடுக்கும்போது கட்டாயம் அதை நாங்கள் எதிர்ப்போம்.
காவிரிக்குக் குரல் கொடுத்த அதே தீரம்.. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கம்யூனிஸ்ட்களிடம் இல்லையே?
தவறான கருத்து. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முக்கிய வெற்றியைத் தமிழகம் பெற்றிருக்கிறது என்றால், அது கம்யூனிஸ்ட்களும் போராடியதால் கிடைத்ததுதான். தமிழக கம்யூனிஸ்ட்கள் போராடியது கேரள கம்யூனிஸ்ட்கள் மத்தியிலும், கேரள மக்கள் மத்தியிலும் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நியாய உள்ளம் படைத்த எவரும் ஏற்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT